ஏலத்தில் வாங்கிய பயணப்பெட்டிகளுக்குள் கிடைத்த இறந்துபோன குழந்தைகளின் உடல்பாகங்கள்.
நியூசிலாந்தில் கடந்த வாரம் நடந்த ஏலமொன்றில் கைவிடப்பட்டுப் பூட்டப்பட்டுக் கிடந்த சேமிப்பறைக்குள் கிடந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் தமது வீட்டுக்குக் கொண்டு சென்று திறந்துபார்த்து அதிர்ந்துபோனார்கள். காரணம் அப்பொருட்களுடன் கிடந்த பெட்டியொன்றுக்குள் இறந்த இரண்டு குழந்தைகளின் உடல்பாகங்கள் கிடைத்தன.
ஔக்லாந்து நகரின் குடியிருப்புப் பகுதியொன்றில் வாழ்பவர்கள் தமது பொருட்களைப் பேண வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் அறையொன்றுக்குள் இருந்த பொருட்களே ஏலத்துக்கு விடப்பட்டன. அதனால், அவைகளை ஏலத்தில் வாங்குபவர்கள் அவற்றினுள் என்னென்ன இருக்கின்றன என்பதை முதலிலேயே அறிந்துகொள்ள வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
ஏலம் எடுத்தவர்களுக்குக் கிடைத்த ஒரேயளவான இரண்டு பயணப்பெட்டிகளுக்குள் குழந்தைகளுக்கான பல விளையாட்டுப் பொருட்களுடன் குழந்தைகளின் உடல்பாகங்களையும் கண்ட அவர்கள் உடனே பொலீசாரிடம் தொடர்புகொண்டார்கள்.
கொலைகள் பற்றிய இரண்டு விசாரணைகளைத் தொடங்கிய பொலீசார் அவ்விரண்டும் ஐந்து முதல் பத்து வயதுள்ள இரண்டு பிள்ளைகளின் உடல்பகுதிகள் என்று தெரிந்துகொண்டார்கள். அவர்கள் சுமார் 3 – 5 வருடங்களுக்குள் இறந்துபோனவர்கள் என்று தெரியப்படுத்தப்பட்டது. அவர்களின் தாயார் தென்கொரியாவில் இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
குறிப்பிட்ட பெண் நியூசிலாந்துக் குடியுரிமை உள்ளவர் என்பதும் அவர் 2018 க்குப் பின்னர் தென்கொரியாவில் வாழ்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. மரபணு ஆராய்ச்சி முறை மூலம் தாம் மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறும் பொலீசார் குறிப்பிட்ட பெண் தென்கொரியாவில் எங்கிருக்கிறார் என்பதை இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்ளவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்