வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 90 பேருடன் அல்ஜீரியாவில் எரிவாயு வேட்டைக்குப் போயிருக்கிறார் மக்ரோன்.
அல்ஜீரியாவின் அரசு ஒரு இராணுவ ஆக்கிரமிப்புத்தனமானது என்று பிரான்ஸ் ஜனாதிபதி விமர்சித்து ஒரு வருடம் கழியவில்லை. எரிவாயுத்தேவையால் ஏற்பட்ட அவதி அல்ஜீரியாவுடன் ஏற்பட்டிருக்கும் அரசியல் முறுகலை நிறுத்திவிட்டு அங்கே விஜயம் செய்யவைத்திருக்கிறது. தன்னுடன் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, ஆராய்ச்சியாளர்கள், கலாச்சார விற்பன்னர்கள் என்று சுமார் 90 பேரையும் கூட்டிக்கொண்டு அல்ஜீரியாவுக்குப் போயிருக்கிறார் ஜனாதிபதி மக்ரோன்.
ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தபின் அதற்கு மாற்றாக எரிபொருள் வளங்களைக் கொண்ட நாடுகளைத் தேடி விஜயம் செய்து நல்லுறவு கொண்டாட முயல்கிறார்கள் மேற்கு நாடுகளின் தலைவர்கள். ஸ்பெய்ன், இத்தாலி ஆகியவை ஏற்கனவே அல்ஜீரியாவிடமிருந்து எரிவாயுக் கொள்வனவுக்கான ஒப்பந்தங்களைச் செய்திருக்கின்றன.
சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை சூழல் ஆர்வலர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கான ஆதரவு பிரான்ஸில் கணிசமாக உயர்ந்திருப்பதால் நாட்டில் பாவிக்கப்படும் படிம எரிபொருட்களையும் வேகமாகக் குறைக்க பிரான்ஸ் முடிவுசெய்திருக்கிறது. ஐரோப்பாவில் முதல் நாடாக பெற்றோலியப் பொருட்களுக்கான விளம்பரங்களை பிரான்ஸ் தடை செய்திருக்கிறது.
பிரான்ஸிலிருந்து அல்ஜீரியாவுக்கு மக்ரோனுடன் போயிருக்கும் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் அல்ஜீரியாவில் வெவ்வேறு துறையிலிருப்பவர்களைச் சந்திக்கவிருக்கிறார்கள். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக மோசமாகியிருக்கும் இரண்டு நாடுகளுக்குமான உறவுகளை மீண்டும் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதும் மக்ரோனின் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்