அப்பலோவின் இரட்டை அர்ட்டெமிஸ் சந்திரனை நோக்கிப் பயணம் செய்யும் நாள் நெருங்குகிறது.
ஐம்பது வருடங்களாயிற்று சந்திரனை நோக்கிய அப்பலோவின் கடைசிப் பயணம் நிறைவடைந்து. புதிய தலைமுறை விண்வெளிப் பயணிகள் அப்பலோவின் பெண் இரட்டையரான அர்ட்டெமிஸ் ஏவுகலத்தில் ஆகஸ்ட் 29 ம் திகதி சந்திரனுக்குப் பயணம் செய்யவிருக்கிறார்கள். அர்ட்டெமிஸ் 1 தன்னில் சுமந்துசெல்லும் ஓரியன் விண்கலத்தில் இம்முறை ஒரு பெண்ணும் பயணிக்கவிருக்கிறார், நிலவில் தனது பாத அடிகளைப் பதிக்க.
ஓரியன் கலத்தைச் சுமந்துசெல்லப்போகும் அர்ட்டெமிஸ் தான் தற்போது விண்வெளிக்குக் கலங்களை எடுத்துச்செல்லும் இயந்திரங்களில் உலகின் மிகப் பெரியதும் சக்திபெற்றதுமாகும். நாஸாவுக்கு இணையாக Space X நிறுவனம் விண்கலங்களை எடுத்துச்செல்லும் இயந்திரமான ஸ்டார்ஷிப் ஐத் தயாராக்கிக்கொண்டிருக்கிறது. எந்த நாளிலும் தயாராகிவிடும் என்ற நிலையிலிருக்கும் ஸ்டார்ஷிப் அர்ட்டெமிஸை விடச் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க அரசின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா, தனியார் நிறுவனமான Space X மற்றும் சீனா ஆகிய மூன்று தரப்பார் தற்போது சந்திரனுக்குப் பயணம் செய்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியிலிருக்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுவரை நாஸா தனது ஆதிக்கத்தைச் செலுத்திவந்த விண்வெளி ஆராய்ச்சி இனிமேல் தனியாரிடம் சென்றுவிடும் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்