பாரிஸில் ஞாயிறன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலமாகத் தமது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சமூக சேவைகள் ஒழுங்காகச் செயற்படவில்லை, தனியார் மயப்படுத்தல் அதிகரித்து நிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, சூழல் பேணும் நடவடிக்கைகள் போதாது, மக்ரோன் அரசு எதிர்க்கட்சியின் குரலுக்கு மதிப்பளிக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் பிரான்சில் பரவலாக எழுந்து உச்சக் குரலில் ஒலிக்கிறது. தமது அதிருப்தியை வெளிப்படுத்த பாரிஸில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளை ஆக்கிரமித்துக் குரலெழுப்பினார்கள். ஊர்வலங்களை ஒழுங்குசெய்த அமைப்புகள் அங்கே சுமார் 150 ஆயிரம் பேருக்கும் அதிகமாகக் கூடியதாகக் குறிப்பிடுகிறார்கள். அரசின் கணிப்பு 30,000 பேர் என்பதாகும்.
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான அளவு இடங்களைக் கைப்பற்றியிருக்கும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி மக்ரோனும் அரசாங்கமும் தம்முடைய கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று பொருமுகிறார்கள். வேலை நிறுத்தங்களால் அத்தியாவசியச் சேவைகள் முடங்கியிருக்கின்றன. எரிபொருட்களை நாடெங்கும் விநியோகம் செய்பவர்களின் வேலை நிறுத்தத்தால் மணிகணக்காக மனிதர்கள் பெற்றோல் நிலையைங்களில் காத்துக்கிடக்கிறார்கள்.
எதிர்க்கட்சியான இடதுசாரிக் கட்சியின் தலைவர் ஷோன் லுக் மெலன்சோன், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற அன்னி எர்னோ ஆகியோர் கைகோர்த்தபடி ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள். வன்முறையில் ஈடுபடும் இடதுசாரிகளும் ஊர்வலத்தில் பங்குபற்றுவது ஏற்கனவே அறிந்திருந்ததால் பதட்ட நிலைமை நிலவியது. வன்முறையாளர்களின் நடவடிக்கைகளைத் தடுக்க பொலீசார் கண்ணீர்ப்புகையைப் பாவிக்கவேண்டியிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்