சட்டங்களை மீறிக் காற்றாடி விமானங்களை நோர்வேயில் பாவித்த ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் நோர்த்ஸ்டிரீம் 1, 2 எரிவாயுத்தொடர்ப்புக் குளாய்களில் குண்டுவைத்து அதன் மூலம் நச்சுக்காற்று வெளியாகி பால்டிக் கடல் பிராந்தியத்தில் பரவிவந்தது தெரிந்ததே. குறிப்பிட்ட குளாய்கள் வெடியால் தகர்க்கப்பட முன்னரும் பின்னரும் நோர்வேயின் எண்ணெய்த் தயாரிப்பு, சேகரிப்புத் தளங்களின் மேலாக அடையாளம் தெரியாதவர்களின் காற்றாடி விமானங்கள் பறந்து திரிந்தது தெரியவந்தது. அதனால் நோர்வே அரசு தனது நாட்டில் பாதுகாக்க வேண்டிய முக்கிய இடங்களின் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
மேற்கு நாடுகள் தமது வான்வெளியில் ரஷ்யர்களின் விமானங்கள் பறக்கலாகாது என்று தடை போட்டிருக்கின்றன. நோர்வேயின் சட்டம் ரஷ்யாவின் விமானங்கள் மட்டுமன்றி காற்றாடி விமானங்களையும் தடை செய்திருக்கிறது. சமீபத்தில் இரண்டு ரஷ்யர்கள் நோர்வேயின் வடக்குப் பிராந்தியத்தில் காற்றாடி விமானங்களைப் பறக்கவிட்டு முக்கிய இடங்களில் படங்கள் எடுத்திருக்கிறார்கள் என்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
50 வயதுக்கு மேற்பட்ட அவ்விரண்டு ரஷ்யர்களும் சமீபத்தில் நோர்வேக்குள் நுழைந்திருக்கிறார்கள். நாட்டுக்குள் வெவ்வேறு பகுதிகளில் பயணித்திருக்கிறார்கள். அவர்களிலொருவரின் பெட்டிக்குள் கடவுச்சீட்டுகள் மூன்று இருந்தது. இருவருமே வெவ்வேறு நகரங்களில் எல்லைப்பகுதிகள், பாதுகாப்பு மையங்களைக் குறிவைத்துத் தமது விமானங்களைப் பறக்கவிட்டுப் படமெடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நோர்வேயின் முக்கிய இடங்களில் எடுக்கப்பட்ட பல படங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு ரஷ்யர்களும் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்