தமது அரசுக்கெதிரான கிளர்ச்சிக்காரர்களைக் கைப்பற்றிக் கூட்டாக வதைத்துக் கொன்றார்கள் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தான் அரசைத் தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் அவர்களுக்கெதிராகக் கிளர்ச்சிகள், ஆயுதப் போராட்டங்கள் உண்டாகுவது அடிக்கடி செய்திகளில் காணக்கிடைக்கிறது. அவைகளை இரும்புக் கரம் கொண்டு நெரித்து ஒடுக்கிவிடுகிறார்கள் தலிபான்கள். ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் படங்கள், செய்திகளின்படி கடந்த மாத இறுதியில் பஞ்சீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருந்தவர்கள் 27 பேரைக் கைப்பற்றி ஒன்றாகக் கொன்று அழித்திருக்கிறார்கள் தலிபான்கள்.
தலிபான்களின் ஆட்சியில் நடப்பவை பற்றிக் கவனித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடும் அமைப்பு ஒன்று வெளியாகியிருக்கும் படங்கள் உண்மையானவையே என்கிறது. அப்படங்களொன்றில் ஐந்து பேர் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையிலிருக்க தலிபான்கள் சிலர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்றுவிட்டு உற்சாகக் கூச்சலிடுவதைக் காட்டுகிறது.
சர்வதேச அளவில் தங்களை ஆப்கானிய அரசாங்கமாக அங்கீகரிக்குபடி வேண்டிக்கொள்ளும் தலிபான்கள் நாட்டுக்குள் மிகக் கடுமையான முறையில் தமக்கு உண்டாகும் எதிர்ப்புகளைக் கையாள்வதாகக் குறிப்பிடப்படுகிறது. மேற்கண்ட கொலைகள் போன்ற சுமார் 17 கூட்டுக்கொலைகள் பற்றிய படங்கள் வெவ்வேறு வழியில் வெளியாகியிருக்கின்றன. அவைகளின் நம்பகத்தன்மையும் ஆராயப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்