சூழல் பேணும் இயக்கத்தினரின் தொந்தரவு தாளாமல் தனது விமானத்தை விற்றார் உலகின் செல்வந்தரொருவர்.

தனியாகத் தனக்கென்று பணக்காரர்கள் சொந்த விமானங்களை வைத்துக்கொண்டு தேவைப்பட்டபோது பறப்பதால் ஏற்படும் சூழல் மாசுபாடு குறித்துச் சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்படுகிறது. பிரான்ஸ் அரசியலில் அதுபற்றிய விமர்சனங்கள் கடுமையானவை. அப்படி விமர்சனம் செய்யும் இயக்கத்தினரின் தொந்தரவு தாளாமல் உலகின் இரண்டாவது செல்வந்தர் தனது விமானத்தை விற்றுவிட்டதாக அறிவித்திருக்கிறார்.

பெர்னார்ட் ஆர்னால்ட் [Bernard Arnault]  உல்லாசப் பொருட்களை விற்கும் நிறுவனமான LVMH  க்கு உரிமையாளர், அத்துடன் Louis Vuitton நிறுவனத்தின் பகுதி உரிமையாளருமாகும். அவரது சொத்தின் மதிப்பு சுமார் 140 பில்லியன் டொலர்களாகும். தனது விமானத்தால் ஏற்படும் நச்சுக் காற்றும் அதன் விளைவுகளையும் சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் சமூகவலைத்தளங்களில் பிரசுரித்து வந்ததால் தனது நிறுவனத்துக்கு அவப்பெயர் உண்டாகும் நிலைமையைத் தடுக்கத் தனது விமானத்தை விற்றுவிட்டதாக பெர்னார்ட் ஆர்னால்ட் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் பெர்னார்ட் ஆர்னால்ட் தனக்கென்று விமானதில் பயணம் செய்யாமலில்லை. “நான் செய்யும் சூழல் மாசுபாட்டை இனி எவரும் கவனிக்க முடியாது. ஏனெனில், எனக்குத் தேவைப்படும்போது நான் ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்கிறேன்,” என்கிறார் அவர்.

2021 இல் பதின்ம வயதைச் சேர்ந்த ஒருவர் உலகின் முதன்மையான செல்வந்தரான எலோன் மஸ்க் தனது சொந்த விமானத்தில் பறக்கும்போது ஏற்படும் சூழல் மாசுபாட்டை அளக்க ஒரு டுவிட்டர் கணக்கை ஏற்படுத்தினார். அதை மூடிவிடச் சொல்லிக் கேட்டு 5,000 டொலர் கொடுக்க முன்வந்தார் மஸ்க். அதை அந்தப் பதின்ம வயதுக்காரர் ஏற்கவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *