தனது நாட்டின் பகுதியான திகிராய் மீது போரை ஆரம்பித்த எத்தியோப்பியா அப்பகுதியில் முன்னேறுகிறது.
ஆபிரிக்காவின் விசனமுள்ள மூலையில் போரால் சிதைந்துகொண்டிருக்கும் இன்னொரு நாடு எத்தியோப்பியா ஆகும். நோபல் ஞாபகத்துக்கான அமைதிப் பரிசைப் பெற்ற பிரதமரான அபிய் அஹமது ஆட்சிக்கு வந்து நாட்டின் பல்லினத்தவர்களின் பிராந்தியங்களையும் மத்திய அரசுக்குக் கீழ் கொண்டுவர முற்பட்டார். அதையடுத்து நாட்டின் வெவ்வேறு இனத்தவர்கள் தாம் முன்னர் அனுபவித்த சுயாட்சியை இழந்துவிடலாகாது என்று மறுத்து அரசுக்கெதிராக ஆயுதங்களைத் தூக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட போர் நீண்டுகொண்டிருக்கிறது.
எத்தியோப்பியாவில் ஒறோமோ [35.3%], அம்ஹாறா[26.2%], சோமாலி [6%], திகிறாய் [5.9%], சிடாமோ, குராக், வலைத்தா ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு சிறுபான்மையினரும் [17.3%] உண்டு. சுயாட்சியாக இருந்த திகிராய் மாநில ஆட்சியாளர்கள் மத்திய அரசின் கீழ் அடங்க முடியாது என்று குறிப்பிட்டு ஆயுத இயக்கமொன்றின் மூலம் எதிர்த்து வருகிறார்கள்.
திகிராய் மாநிலத்தின் பக்கத்து நாடான எரித்திரியாவின் இராணுவத்தின் உதவியுடன் எத்தியோப்பிய இராணுவம் 2020 திகிராய் மாநிலத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கியது. திகிராய் போராளிகளான Tigray People’s Liberation Front அரச இராணுவத்துடன் போரிட்டனர். திகிராய் பகுதியின் தொலைத்தொடர்புகளை முழுசாகப் பல மாதங்கள் மூடிவிட்ட எத்தியோப்பிய இராணுவம் அங்கே இன அழிப்பில் ஈடுபட்டதாக ஐ.நா குறிப்பிடுகிறது. சுமார் 50,000 பேர் கொல்லப்பட்டனர். திகிராய் விடுதலை இயக்கத்தினர் அதன் பின் அரசுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து, அவைகள் எவ்விதத் தீர்வுமின்றே கைவிடப்பட்டன.
சமீப வாரங்களில் திகிராய்ப் பிராந்தியம் மீதான எத்தியோப்பிய அரசின் தாக்குதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகவே இரண்டு தரப்பாருக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட ஐ.நா எடுத்துவரும் முயற்சிகள் மீண்டுமொருமுறை பலனின்றிப் போயின. மத்திய அரசின் இராணுவத் தாக்குதலுக்குத் தாம் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று சூழுரைத்துத் திகிராய் விடுதலைப் போராளிகள் போரில் ஈடுபட்டு வருகிறார்கள். எரித்திரிய இராணுவம் இம்முறையும் எத்தியோப்பிய இராணுவத்துடன் கைகோர்த்திருக்க திகிராய் இயக்கத்தினரின் கையிலிருந்து பல பகுதிகளைக் கைப்பற்றியதாக எத்தியோப்பியா தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்