ஆஸார்பைஜான் ஜனாதிபதி ரஷ்யாவில் புத்தினைச் சந்தித்து ஆர்மீனியாவுடன் சமாதானம் செய்துகொள்ளச் சம்மதித்தார்.
ரஷ்யாவில் சோச்சி நகரில் ஜனாதிபதி புத்தின் ஆஸார்பைஜான் ஜனாதிபதி ஈளம் அலியேவைஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பஷ்னியான் ஆகியோரைச் சந்தித்தார்.ஆர்மீனியாவுடன் சமாதானம் ஏற்படுத்திக் கொள்வதில் தனக்குச் சம்மதம் என்றும் அதற்காகப் புத்தின் எடுத்து வரும் நடவடிக்கைகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதன் பின்னர் அலியேவ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
புதிய நகானோ – கரபாக் தகராறுகளில் சுமார் 50 இராணுவ வீரர்கள் இறப்பு.
ஆஸார்பைஜானின் பிராந்தியமான நகானோ – கரபாக்கினுள் ஆர்மீனியா 1980- களில் நுழைந்ததால் இரண்டு நாடுகளுக்குமிடையே உண்டாகிய கசப்பு வளர்ந்திருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயிருக்கும் எல்லையில் சமீபகாலத்தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் சுமார் 300 பேர் இறந்திருக்கிறார்கள்.
சோவியத் காலத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமாயிருந்த மத்திய ஆசிய நாடுகளிடையே தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தும் பேணுவதில் ஆர்வமாக இருக்கிறது ரஷ்யா. அதே நாடுகளைத் தனது பக்கம் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளில் ஈர்ப்பதில் சீனாவும் ஆர்வம் காட்டி வருகிறது. எனவே, அவர்களின் மீதான தனது பிடியைத் தளர்த்த ரஷ்யா தயாராக இல்லை.
2020 இல் இரண்டு தரப்பாருக்கும் ஏற்பட்ட போரை ரஷ்யாவின் முயற்சி முடிவுக்குக் கொண்டுவந்தது. அதையடுத்து அங்கே சுமார் 2,000 ரஷ்ய அமைதி பேணும் இராணுவம் நிலைகொண்டிருக்கிறது. சமீபத்தில் இரண்டு சாராருக்கும் ஏற்பட்ட மோதல்களையும் ரஷ்யாவே தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவந்தது. அதன் பின்னர் ஆர்மீனியாவின் பிரதமரான நிக்கோல் பஷ்னியானை புத்தின் சந்தித்து நகானோ – கரபாக் பிராந்தியத்தில் அமைதியான முடிவைக் கொண்டுவருவது தனது முக்கிய குறிக்கோள்களில் ஒன்று என்று உறுதியளித்திருந்தார்.
மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் நகானோ- கரபாக் பிராந்தியச் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டனர். அதையடுத்து பஷ்னியான் ஈரானுக்குச் சென்று ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்