சில அத்தியாவசிய உணவுப்பொருட்களின் ஏற்றுமதியை பொலீவியா நிறுத்தியதால் எல்லைகளில் மறிப்புப் போராட்டம்.
தனது நாட்டின் தயாரிப்புகளான சர்க்கரை, இறைச்சி, உணவுக்கான எண்ணெய், சோயா ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை பொலீவிய அரசு கடந்த வாரத்தில் தடை செய்தது. சர்வதேச ரீதியில் உணவுப்பொருட்களுக்கு ஏற்பட்டு வரும் தட்டுப்பாட்டையும், விலையுயர்வையும் நோக்கி அதனால் தனது நாட்டு மக்களுக்கு அப்பொருட்கள் கிடைக்கவேண்டும் என்பது முதல் முக்கியம் என்ற கருத்துடன் அதைச் செய்ததாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வுகளால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே எதிர்த்து ஒரு சாரார் வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசின் ஏற்றுமதித் தடை நாட்டின் அன்னியச் செலாவணி வரவைக் குறைத்து மேலும் நிலைமையை மோசமாக்கும் என்று பலர் கருதுகிறார்கள். நாட்டின் தயாரிப்பில் ஒரு சிறிய பகுதி மட்டுமே உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானது என்கிறர்கள் பொருளாதார வல்லுனர்கள்.
ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்ற காரணத்தால் நாட்டின் பாரவண்டிச் சாரதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் பொலீவியாவுக்கும், சிலேக்கும் இடையே செல்லும் பிரதான பாதையில் தங்கள் பாரவண்டிகளை நிறுத்தி மறியல் செய்கிறார்கள். பக்கத்து நாடுகளுக்குக் குறிப்பிட்ட பொருட்களைப் பாரவண்டி மூலம் ஏற்றுமதி செய்வதையே தொழிலாகக் கொண்ட பாரவண்டிச் சாரதிகளின் வாழ்வாதாரமாகும்.
சிலே மட்டுமன்றி, பிரேசில், பராகுவாய், ஆர்ஜென்ரீனா, பெரு ஆகிய நாடுகளையும் எல்லையாகக் கொண்ட நாடு பொலீவியா. தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுக்கு மட்டுமன்றி சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் பொலீவியா ஏற்றுமதி செய்கிறது. பாரவண்டிகளின் மறிப்பு சிலேயுடனான வீதிகளை மறிப்பதிலிருந்து மற்றைய நாடுகளுக்குமான வீதிகளுக்கும் தொடரும் என்று சாரதிகள் எச்சரிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்