“சுவாசிக்கும் காற்று நிலைமையில் டெல்லியில் மிக அழுக்காகியிருக்கிறது, பாடசாலைகளை மூடுங்கள்!”
கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் தலைநகரான டெல்லி பிராந்தியம் சுவாசிப்பதற்கு அழுக்கான, நச்சுத்தனம் அதிகமுள்ள காற்றைக் கொண்ட உலகத் தலைநகரம் என்ற கெட்ட பெயரை மீண்டும், மீண்டும் பெற்று வருகிறது. சர்வதேச ரீதியான அமைப்புகள் மட்டுமன்றி நாட்டுக்குள் காற்றிலிருக்கும் மாசுபட்ட தன்மையை அளக்கும் இந்திய அரசின் அதிகாரமும் அதைச் சுட்டிக்காட்டி வருகின்றன. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் இந்திய அரசின் அதிகாரமும் [National Commission for Protection of Child Rights] அந்த எச்சரிக்கையைத் தற்போது வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், ஹரியானா போன்ற விவசாயம் அதிகமாக நடக்கும் மாநிலங்களின் எல்லையிலிருக்கிறது டெல்லி. விவசாயிகள் தமது நிலத்தில் குப்பைகளை ஒன்றுபடுத்தி எரிக்கும் காலத்தில் அந்த நச்சுக்காற்று டெல்லியின் வளிமண்டலத்தை அழுக்காக்கிவிடுகிறது. அத்துடன் டெல்லியின் போக்குவரத்து, வர்த்தக நடவடிக்கைகளும் பிராந்தியத்தின் காற்றை நச்சுத்தனமாக்குகிறது. கடந்த வாரம் கொண்டாடப்பட்ட தீபாவளியின் பட்டாசு வெடிப்புகள் ஏற்கனவே சுவாசிப்பதற்குப் பாதுகாப்பற்றதாக இருந்த சூழலை தற்போது மேலும் மோசமாக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
புதனன்று மட்டும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகளால் உண்டாக்கப்பட்டிருக்கும் தீக்களின் எண்ணிக்கை சுமார் 3,800 என்கிறது இந்தியாவின் விவசாய ஆராச்சி நிர்வாகம். எனவே, காற்றிலிருக்கும் நச்சுத்தன்மை ஆரோக்கியமானவர்களுக்கே ஆபத்தானது. இளவயதினர் அதைச் சுவாசிப்பது அவர்களுக்கு மோசமான வியாதிகளை உண்டாக்கும். ஏற்கனவே சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதியுள்ளவர்களின் நிலைமை மேலும் மோசமாகும்.
குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் இந்திய அரசின் அதிகாரம் டெல்லியின் பிரதம காரியதரிசிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “பிராந்தியத்தில் வாழும் குழந்தைகளின் நலனைக் கருதி உடனடியாகப் பாடசாலைகள் மூடப்படவேண்டும். நீண்ட காலமாகவே இதுபற்றி டெல்லி அரசுக்கு எச்சரித்தும் அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை,” என்று கண்டிப்புடன் கோரப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்