கஞ்சாவை வைத்திருக்க, விற்க அனுமதி கொடுக்கும் சட்டங்களை இயற்ற ஜேர்மனி தயாராகியது.
கஞ்சா பாவிப்பைச் சட்டபூர்வமாக அனுமதித்தல் கடந்த ஒரு தசாப்தமாக உலகின் பல நாடுகளிலும் சிந்திக்கப்பட்டு வருகிறது. ஆசியாவில் தாய்லாந்து, ஐரோப்பாவில் மால்டா ஆகிய நாடுகளை அதைச் செயற்படுத்தியும் விட்டன. சமீபத்தில் ஜேர்மனியின் அரசைக் கைப்பற்றிய கூட்டணியின் திட்டங்களில் அந்த நகர்வு பற்றி ஆராய்ந்து தமது ஆட்சிக்காலத்தினுள் செயற்படுத்துவதாக உறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் கார்ல் லௌதர்பக் தனியார் சிறிய அளவில் கஞ்சாவை வைத்திருக்க, பாவிக்க, விற்க அனுமதிப்பது பற்றி சட்டங்களைக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
வயது வந்தவர்களுக்கு உரிமை பெற்ற விற்பனை நிலையங்களில் கஞ்சா விற்பனை செய்ய திட்டத்தின் மூலம், போதைப்பொருளாகப் பிரகடனப்பட்டிருக்கும் கஞ்சாவைச் சரியான அளவில் பாவிக்கவும், அதை விற்பனை செய்தல் போன்ற குற்றங்கள் மற்றும் கறுப்புச் சந்தையை எதிர்ப்பதும் ஜேர்மனிய அரசின் இந்த நிலைப்பாட்டு மாற்றத்துக்கு முக்கிய காரணமாகும். கஞ்சாவைக் கட்டுப்பாடான வழியில் பாவித்தல் பல நோய்களிலிருந்து மனிதர்களுக்குத் தளர்வு கொடுப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கஞ்சா விற்றல் சட்டம் கொண்டுவரப்படும் அதே சமயம் அந்த விற்பனையை அரசு தெளிவாக வரையறுத்துக் கண்காணிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
குறைந்த அளவில் வீடுகளில் கஞ்சா வளர்க்க அனுமதித்தல், ஒரு நபர் 30 கிராம் கஞ்சாவை வைத்திருக்க, அந்த அளவில் விற்பனை செய்தல் ஆகியவை திட்டமிடப்பட்டிருக்கும் சட்டத்தின்படி அனுமதிக்கப்படும். ஜேர்மனி தனது நாட்டில் அதைச் செயற்படுத்த முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு அது முரண்பாடாக இல்லாதிருக்கிறதா என்று ஆராயவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்