நோர்வேயின் எண்ணெய் வருமான முதலீட்டு நிதி 2050 இல் காலநிலையைப் பாதிக்காத நிறுவனங்களில் மட்டுமே முதலீடுகளைச் செய்யும்.
பங்குச்சந்தைகளிலிருக்கும் சுமார் 9,000 பல்நாட்டு நிறுவனங்களில் முதலீடுகளைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிதி [The Norwegian Government Pension Fund Global] நோர்வேயினதாகும். 2019 இல் சுமார் 20 % இலாபத்தைப் பெற்ற ஏறுமுகமாகவே இருக்கும் அந்த நிதி உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரால் அதைவிடக் கணிசமான அளவு இலாபத்தை ஆகக்கூடியது 2024 வரை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நோர்வேக் குடிமகனின் தலைக்கும் சுமார் 36,000 அமெரிக்க டொலர்களைக் கொண்டிருக்கிறது அந்த நிதி. 2050 இல் அந்த நிதியானது காலநிலை மாற்றத்தைப் பாதிக்காத வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வதாக இருக்கும் என்று அந்த நிதியின் நிர்வாகத்தினரால் வரையறுக்கப்பட்ட புதிய கோட்பாடு வெளியிடப்பட்டிருக்கிறது.
1180,71 பில்லியன் டொலர்கள் பெறுமதியை அடைந்திருக்கிறது நோர்வேயின் எண்ணெய் வருமானத்தால் இயக்கப்படும் முதலீட்டு நிதி. அந்த நிதி நோர்வேயின் ஓய்வூதிய நிதியென்று பெயரிடப்பட்டிருக்கிறது. தாம் முதலீடு செய்துவரும் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவைகளுடைய செயற்பாட்டை, சேவைகளை, தயாரிப்புக்களைக் காலநிலையைப் பாதிக்காத வகையில் மாற்றுவதே தமது எண்ணம் என்று நோர்வேயின் ஓய்வூதிய நிதியின் புதிய கோட்பாடு விபரிக்கிறது.
தமது ஓய்வூதிய நிதியின் முதலீடுகள் காலநிலையைப் பாதிக்கும் தயாரிப்புக்களில் ஈடுபடுவதை அனுமதிப்பதன் மூலம் அந்த நிதிக்கு நீண்டகால நோக்கில் மட்டுமன்றி குறுகிய கால இலாப இழப்பும் அதிகம் ஏற்படும் என்று நிர்வாகிகள் கணிக்கிறார்கள். காலநிலையைப் பாதிக்கும் தயாரிப்புகளை எவரும் வாங்கப்போவதில்லை, அப்படியானவற்றில் எவரும் முதலீடு செய்யப்போவதில்லை, வங்கிகள் அப்படியானவைக்குக் கடன்களைக் கொடுக்கப்போவதில்லை, எந்தக் காப்புறுதி நிறுவனமும் அந்த நிறுவனங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவே கோட்பாட்டு மாற்றமும், அதன் இயக்க நடவடிக்கைகளும் மிக மிக அவசரமாக முன்னெடுக்கப்படவேண்டியவை என்கிறது நோர்வேயின் ஓய்வூதிய முதலீடுகளின் நிர்வாகம்.
சாள்ஸ் ஜெ. போமன்