“பாலியில் நடக்கவிருக்கும் ஜி 20 மாநாட்டில் பங்குபற்றாமல் ஜனாதிபதி புத்தின் ஒதுங்கிக்கொள்ளக்கூடும்,” என்கிறார் விடூடு.
இந்தோனேசியாவின் பாலி நகரில் விரைவில் கூடவிருக்கிறது ஜி 20 எனப்படும் உலகில் பொருளாதாரத்தில் மிகப்பெரியதான 20 நாடுகளின் மாநாடு. அந்தச் சங்கத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகள் அங்கத்துவர்கள் என்பதால் குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மட்டுமல்லாமல் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் வரை அத்தலைவர்கள் பங்குபற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தோனேசியாவின் ஜனாதிபதியான யோக்கோ விடூடு கடைசியாக சஞ்சிகை ஒன்றுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பேட்டியில் ஜனாதிபதி புத்தின் குறிப்பிட்ட மாநாட்டில் பங்குபற்றாமல் தவிர்த்துவிடக்கூடும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த மாதம் வரை தான் அந்த மாநாட்டில் பங்கெடுக்கக்கூடும் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் உலகின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் ஒரேயடியாகப் பங்குபற்றக்கூடிய முக்கிய நிகழ்வு என்று எதிர்பார்க்கப்பட்ட பாலி மாநாட்டில் ரஷ்யாவின் போக்கில் ஏதாவது மாறுதல் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. உக்ரேனின் ஜனாதிபதிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. புத்தின் அங்கே சமூகமளிப்பாரானால் தான் அங்கே வரப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்