தமது பிராந்தியமென்று பிரகடனம் செய்ய்ப்பட்ட சேர்சன் நகரிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குகின்றன.
பெப்ரவரி 24 ம் திகதி ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டு ஆக்கிரமித்த சேர்சன் நகரிலிருந்து ரஷ்யா தனது படைகளைப் பின்வாங்கிக் கொள்வதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. உக்ரேனில் ரஷ்யா முழுவதுமாகக் கைப்பற்றிய மாகாணமொன்றின் தலைநகரம் அது மட்டுமே.
உக்ரேனில் போரிட்டுவரும் இராணுவத் தளபதி செர்கெய் சுரோவ்கின்நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அந்தப் பின்வாங்கலை முன்மொழிந்தார். அதை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோகு அதை ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருக்கிறார். “எங்களுக்கு எமது இராணுவ வீரர்களின் ஆரோக்கியம் முதன்மையானது. அத்துடன் நாம் அங்கே வாழும் சாதாரண மக்களின் நிலைமையையும் கருத்தில் கொள்ளவேண்டும்,” என்று பின்வாங்கலுக்கான விளக்கத்தை ஷோகு குறிப்பிட்டார்.
சுரோவ்கின் தனது முடிவை எடுப்பது மிகவும் கடினமானது என்றும் அதைத் தவிரத் தற்போதைக்கு வேறு வழியில்லை என்றும் கூறினார். விரைவில் ரஷ்யப் படைகள் தம்மைப் போருக்குத் தயார்செய்துகொண்டு மீண்டும் தாக்குதலை நடத்துமென்றும் கூறிய அவர் அதற்காக சுமார் 115,000 வீரர்கள் ஏற்கனவே சேர்சனை அடுத்துள்ள பிராந்தியத்தில் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்