ஆசியான் மாநாடு நடக்கும் கம்போடியாவுக்கு வந்திறங்கினார் அமெரிக்க ஜனாதிபதி.
தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் மாநாடு கம்போடியாவில் நடக்கிறது. பத்து நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றும் அந்த மாநாட்டில் அவர்களைச் சந்தித்து அமெரிக்காவுக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இடையேயான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் ஜனாதிபதி ஜோ பைடன் சனிக்கிழமையன்று பூனம் பென் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். ,
சீனாவின் கடல்பரப்பு ஆக்கிரமிப்பு, பொருளாதார, வர்த்தக முன்னேற்றம் ஆகியவை தென்கிழக்காசிய நாடுகள் மீது படர்வது அதிகரிக்கும் சமயத்தில் அவர்களை அமெரிக்காவுடன் நெருக்கமாக்கிக்கொள்ளும் நோக்கத்துடனேயே ஜோ பைடனின் விஜயம் அமைந்திருக்கிறது. சில தென்கிழக்காசிய நாடுகளுடனான மனக்கசப்புகளைக் குறைத்துக்கொள்ளல், அந்த நாடுகளுக்கு அமெரிக்காவுடன் மேலதிக வர்த்தக உறவுகளை வழங்குதல் மற்றும் தென் சீனக் கடலில் அவர்களுக்கான பாதுகாப்புக்கு உறவை ஏற்படுத்திக் கொள்ளல் ஆகியவை அமெரிக்காவின் திட்டங்களாகும்.
ஜோ பைடன் தவிர ஜப்பானியப் பிரதமர் பூமியோ கிஷீடா, ஆஸ்ரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோரும் ஆசியான் மாநாடு நடக்கும் சமயத்தில் அந்த 10 நாடுகளின் தலைவர்களுடன் வெவ்வேறு சந்திப்புக்களில் ஈடுபடுவார்கள். சீனாவின் நீர்ப் பிராந்திய ஆக்கிரமிப்பு பற்றி விசனமடைந்திருக்கும் நாடுகளில் ஆஸ்ரேலியா, ஜப்பான் ஆகியவையும் அடக்கம்.
ஜோ பைடன் பங்குபற்றும் முதலாவது ஆசியான் மாநாடு இதுவாகும். 2017 ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு அமெரிக்க ஜனாதிபதி அந்த மாநாட்டில் பங்குபற்றுவதும் இதுவே முதல் தடவையாகும். தனது ஆட்சிக்காலத்தில் ஆசிய நாடுகளுடனான உறவுகளிலிருந்து அமெரிக்காவை ஒதுங்கிக்கொள்ள வைத்த டொனால்ட் டிரம்ப்புக்குப் பின்னர் அமெரிக்கா மீண்டும் அந்த நாடுகளுடன் தொடர்புகளை இறுக்கிக்கொள்ள விரும்புவதை ஜோ பைடன் காட்ட விரும்புவதே இந்த விஜயத்துக்குக் காரணமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்