இஸ்லாமாத் கடைவீதிக் குண்டு வைத்ததாக அஹ்லாம் அல் பஷீர் என்ற சிரியப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இஸ்தான்புல் நகரின் இஸ்திக்லால் வீதியில் ஞாயிறன்று வெடித்த குண்டு வைத்தவர் என்று ஒரு சிரியப் பெண் துருக்கியப் பொலீசாரால் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அஹ்லாம் அல் பஷீர் வட சிரியாவிலிருக்கும் ஐன் அல் அரப் நகரத்தைச் சேர்ந்தவர். துருக்கியிலிருக்கும் குர்தீஷ் இனத்தவரின் ஆயுதம் தாங்கிப் போராடும் குழுவினரானPKK வின் சிரியக் கிளை என்று துருக்கி குற்றஞ்சாட்டும் YPG இயக்கத்தினரின் தலைமை அலுவலகம் அந்த நகரில் இருப்பதாகத் துருக்கிய அரசு குறிப்பிடுகிறது. மேலும் 46 பேர் குண்டு வைத்தவருக்கு உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களின் எண்ணிக்கை 8 என்றும் சுமார் 81 பேர் காயப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்களிடையே ஒன்பது வயதுச் சிறுமியும் அவளது தாயும், இன்னொரு 15 வயதுச் சிறுமியும் அவளது தந்தையும் கொல்லப்பட்டதாக துருக்கிய ஊடகங்களில் காணக்கிடைக்கிறது.
துருக்கியில் நடந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா உட்படச் சர்வதேசத் தலைவர்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் பொது மக்களிடையே நடத்தப்பட்ட அந்த ஈனச் செயலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். அவற்றில் அமெரிக்காவின் அனுதாபச் செய்தியைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறது துருக்கி.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கை ஓங்கியிருந்தபோது அவர்களை வீழ்த்த சிரியாவின் குர்தீஷ் இன ஆயுதப் போராளிகள் பாவிக்கப்பட்டார்கள். அவர்களைத் துருக்கி தமது எதிரிகள் என்று குறிப்பிட்ட போதிலும் அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்கியது. துருக்கியும், கத்தாரும் மட்டும் அந்த விடுதலைப் போராட்ட அமைப்பைத் தீவிரவாதிகள் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். இதுபற்றி ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றுடன் துருக்கி தனது அதிருப்தியைக் காட்டி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்