நாட்டின் நீதித்துறையில் மீண்டும் ஷரியாச் சட்டங்களை முழுவதுமாகப் பிரயோகிக்க ஆப்கானில் உத்தரவு!
தலிபான் இயக்கத்தினரின் ஆன்மீகத் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்ஸாடா நாடு முழுவதிலும் மீண்டும் ஷரியாச் சட்டங்களை முழுவதுமாகப் பிரயோகிக்கும்படி நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியபோது தலிபான்கள் தாம் ஷரியாச் சட்டங்களை முழுமையாகப் பிரயோகிக்கப் போவதில்லை என்று பல தடவைகள் உறுதி கூறியிருந்தார்கள். அச்சமயத்தில் பலரும் சந்தேகப்பட்டது போலவே படிப்படியாகத் தமது பிடியை நாடு முழுவதிலும் இறுக்கிக்கொண்ட தலிபான் இயக்கத்தினர் சார்பில் அச்சட்டங்கள் மீண்டும் முழுமையான அளவில் பிரயோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு முன்னால் தண்டனைகளை நிறைவேற்றுதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட இருக்கிறது. கசையடி, தூக்குமரம், உடற்பாகங்களை வெட்டுதல் போன்ற இஸ்லாமியச் சட்டங்களின்படியான தண்டனைகள் நிறைவேற்றப்படவிருப்பதாக ஸ்பியுல்லா முஜஹீத் என்ற தலிபான்களின் பேச்சாளர் மூலம் தெரியவருகிறது.,
தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் வாழ்வில் பின்னடைவை அனுபவித்து வருகிறார்கள். தலிபான்கள் 2021 இல் ஆட்சிக்கு வர முதல் ஒரு தசாப்த காலமாகப் போராடி வென்ற பல உரிமைகளை அவர்கள் இழந்துள்ளனர். வேலைக்குச் சென்ற பெரும்பாலான பெண்கள் வேலை இழந்து வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரும், அவர்களும் பர்தாவுடன் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். கூடவே வரும் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் இல்லாமல் அவர்களால் பயணம் செய்ய முடியாது. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கைகள் போன்ற சில பொது இடங்களுக்குப் பெண்கள் செல்வதற்குத் தலிபான்கள் சமீபத்தில் தடை விதித்துள்ளனர்.
1996 – 2001 வருடங்களில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியிலும் நாடெங்கும் படிப்படியாக இஸ்லாமிய ஷரியாச் சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்