மலேசியத் தேர்தலின் பின் அகதிகள் மீதான கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கலாம்.

அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தங்களை ஆளப்போகிறவர்கள் யாரென்று முடிவுசெய்ய மலேசியாவின் 32 மில்லியன் மக்கள் நவம்பர் 19 ம் திகதி தேர்தல் சாவடிகளுக்குப் போகவிருக்கிறார்கள். பல இனங்கள் கலந்து வாழும் நாடான மலேசியா தனது பக்கத்து நாடுகளை விட பொருளாதார வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கிறது. நாட்டு மக்களின் சுபீட்சம் அதிகரித்து வரும் அதேசமயம் அங்கே வாழும் அகதிகள் மீதான கெடுபிடிகள் புதிய அரசாங்கத்தில் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் சொந்தக் கணிப்புகளையும் தாண்டிய பொருளாதார வளர்ச்சியானது நாட்டின் ஆளும் கட்சிக்கூட்டணி மீண்டும் பதவிக்கு வர உதவும் என்று கணிக்கப்படுகிறது. சமீப காலத்தில் அங்கே வாழும் அகதிகள் நாட்டுக்கு வேண்டப்பட்டவர்கள் அல்ல என்பதைப் பகிரங்கமாகக் காட்டிவரும் மலேசிய அரசு நாட்டிலிருக்கும் ஐ.நா-வின் அகதிகள் அமைப்பின் காரியாலயத்தை மூடிவிட உத்தேசித்திருக்கிறது.

“அனுமதியில்லாத அகதிகள்” என்று உத்தியோகபூர்வமாகக் குறிப்பிடப்படும் சுமார் 183,000 பேர் மலேசியாவில் வாழ்கிறார்கள். அகதிகளுக்கு அடைகலம் கொடுப்பதாக உறுதிகூறும் ஐ.நா – வின் சர்வதேச பட்டயத்தில் தனது பக்கத்து நாடுகளைப் போல மலேசியாவும் கைச்சாத்திட்டதில்லை. ஐ.நா – வின் அகதிகள் காரியாலயம் தமது நாட்டில் இருப்பது அங்கே அகதிகளை ஈர்த்து வருவதாகச் சொல்லும் அரசு தேர்தல் வெற்றியின் பின்னர் அதை நிச்சயமாகச் செய்யும் என்று அங்கே வாழும் அகதிகள் சஞ்சலமடைந்திருக்கிறார்கள்.

எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகளின் கூட்டணியும் கணிப்பீடுகளில் அதிகம் பின் தங்கியிருக்கவில்லை. அவர்களின் பக்கமிருந்து அகதிகள் மீதான வெறுப்புக் கருத்துகளே குறிப்பிடப்படுகின்றன. அனுமதியின்றி நாட்டுக்குள் வாழ்பவர்களை அவரவர் நாட்டுக்குத் திருப்பியனுப்புவதாக இரண்டு தரப்பாரும் தேர்தல் சமயத்தில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

சுமார் 85 % அகதிகள் மியான்மாரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ரோஹின்யா இனத்தவராகும். மலேசியாவில் வாழும் அகதிகளுக்கு ஏற்கனவே அங்கே உரிமைகள் கொடுக்கப்படுவதில்லை, பிள்ளைகளுக்குக் கல்விக்கான உரிமையோ, அரசின் மருத்துவ சேவைகளுக்கான உரிமைகளோ கிடையாது. அகதிகள் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களைக் கண்காணிக்கும் திட்டத்தை அரசு செயற்படுத்தியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *