“என்னைப் பதவியிழக்கச் செய்தது அமெரிக்கா அல்ல,” இம்ரான் கான் நிலைப்பாட்டில் தடாலடி மாற்றம்.
சில மாதங்களுக்கு முன்னர் வரை வேறு கட்சிகளின் மிண்டுகொடுத்தலுடன் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான் அந்த ஆதரவுகள் இழந்ததால் பதவியிழந்தார். பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை வந்ததும் அக்கூட்டங்களையே ஒத்திவைத்து மக்களைக் கூட்டிய அவர் தான் அன்னிய நாட்டினரின் முயற்சியால் பாதிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் நேரடியாக அமெரிக்காவையும், மறைமுகமாகப் பாகிஸ்தான் இராணுவத்தையும் விரல் நீட்டி அவர்கள் தனது அரசைப் புரட்ட முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பதவியிழந்த பின்னரும் அவர் அதையே குறிப்பிட்டுத் தனது ஆதரவாளர்களைத் திரட்டிப் போராட்டங்கள் நடத்திவந்தார். நேரடியாக பாகிஸ்தான் இராணுவத்தையும் தனக்கு எதிரி, நாட்டின் அரசியலுக்குள் தலையிடுபவர்கள் என்று குற்றஞ்சாட்டினார்.
அவரது ஆட்சிக்காலத்தில் அவர் தனக்கும் தனது மனைவிக்கும் வெளி நாட்டுத் தலைவர்களால் கொடுக்கப்பட்ட பரிசுகளைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டதால் நாட்டின் தேர்தல் ஆணையம் அவரைப் பொது வாழ்க்கையில் ஈடுபடலாகாது என்று உத்தரவிட்டிருக்கிறது. அதையே நாட்டின் உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்ததை எதிர்த்தும் கடந்த வாரம் வரை இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கூட்டிப் பெரும் குரலில் எதிர்த்து வந்தார். அச்சமயத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுக் குண்டடிபட்டார்.
திடீரென்று தனது குற்றச்சாட்டுக்களை இம்ரான் கான் வாபஸ் வாங்கியிருக்கிறார். நடந்தவை பற்றித் தான் மேலும் பேசப்போவதில்லை என்று குறிப்பிடும் இம்ரான் கான் எதிர்காலத்தில் தான் அமெரிக்காவுடன் சேர்ந்து ஒத்துழைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது புதிய நிலைப்பாடு பற்றி அவர் பிரிட்டிஷ் பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார்.
இம்ரான் கானின் நிலைப்பாட்டு மாற்றத்தைப் பற்றிக் கேள்விக்குறி எழுப்பியிருக்கிறார் செய்தித்துறை அமைச்சர் மரியம் ஔரங்சீப்.
“அன்னிய நாட்டுச் சதிகள் என்ற கூற்றால் இந்த நாட்டையே குழப்பியதற்கான காரணத்தை அவர் விளக்கவேண்டும். அன்று இம்ரான் கானை நம்பியவர்களுக்கெல்லாம் அவர் என்ன சொல்லப்போகிறார். தனது சொந்தப் பதவி ஆசைக்காக அவர் பாகிஸ்தானுக்கு வேறு நாட்டு அரசுகளிடம் அவமதிப்பை உண்டாக்கியிருக்கிறார் , அன்று சொன்னதா இப்போது சொல்வதா உண்மை?” என்று அவர் டுவீட்டியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்