சுதந்திரமடைந்தது முதல் மலேசியாவை ஆண்ட கட்சி வழுக்கி விழ, இரண்டு மடங்காக ஆதரவைப் பெற்றுக்கொண்டது இஸ்லாமியக் கட்சி.
மலேசியாவில் கடந்த வார இறுதியில் நடந்த தேர்தல் நாட்டின் அரசியல் களத்தை மாற்றியமைத்திருக்கிறது. U.M.N.O எனப்படும் நாட்டைச் சுதந்திர காலம் முதல் ஆண்ட மலேசியத் தேசிய அணியினர் பெருமளவில் தோல்வியடைந்திருக்கிறார்கள். பாராளுமன்றத்தின் 222 இடங்களில் 30 ஐ மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்திருக்கிறது.
தேர்தல் அறிவித்ததிலிருந்தே மலேசியாவை ஆளப்போகும் அடுத்த அரசு எவருடையது என்பதைக் கணிக்க எவராலுமே இயலவில்லை. எந்த ஒரு கட்சியும், அணியும் தனியாக ஆட்சியமைக்க முடியாத நிலைமையே ஏற்படும் என்று அரசியல் வல்லுனர்கள் குறிப்பிட்டது போலவே தேர்தல் முடிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகளாக இருந்தவையே தமது ஆதரவைப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன.
ஆட்சியிலிருந்த அணியின் கட்சிகளிலொன்றான தேசிய அணி 73 பாராளுமன்ற இடங்களைப் பெற்றுத் தனது ஆதரவை அதிகரித்துக்கொண்டது. எதிர்க்கட்சியாக இருந்த சீர்திருத்த முன்னணி 82 இடங்களைப் பெற்றது. தனது வாக்கு வங்கியைக் கடந்த தேர்தலில் பெற்றதை விட இரட்டையாகப் பெருக்கிக்கொண்டது சுத்தமான மலேசியா கட்சி. மலேசியாவில் இஸ்லாத்தின் ஷரியாச் சட்டங்களைக் கொண்டுவந்து நாட்டை ஆப்கானிஸ்தான், ஈரான் போல மாற்றவேண்டும் என்று கோருகிறது அக்கட்சி. ஏற்கனவே மூன்று மாநிலங்களைக் கைப்பற்றி அங்கே கடுமையான இஸ்லாமியச் சட்டங்களை அக்கட்சி வழக்கத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.
அதிக இடங்களைப் பெற்ற சீர்திருத்த முன்னணியை ஆட்சியமைக்கத் தேவையான 112 பாராளுமன்ற இடங்களைக் காட்டும்படி மலேசியாவின் அரசன் கேட்டிருக்கிறார். அக்கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிம் தனது கட்சி அரசமைக்க 30 இடங்களைப் பெற்ற மலேசியத் தேசிய அணி மிண்டுகொடுக்கும் என்று கூறிப் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார். திங்களன்று பிற்பகல் வரை அன்வர் இப்ராஹிமுக்குக் கொடுக்கப்பட்ட கெடு மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்