குர்தீஷ் மக்கள் வாழும் சிரியாவின் வடக்கு, ஈராக் பிராந்தியங்களில் துருக்கிய இராணுவத் தாக்குதல்.
கடந்த வாரம் இஸ்தான்புல் வியாபார வீதியில் வெடித்த குண்டு குர்தீஷ் போராளிகளின் வேலையே என்று குறிப்பிடும் துருக்கி அந்தப் போராளிகளின் மையங்கள் என்று குறிப்பிடப்படும் பிராந்தியங்களில் தனது தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. தீவிரவாதிகள் என்று துருக்கியால் பிரகடனப்படுத்தப்பட்ட PKK எனப்படும் குர்தீஷ் விடுதலை அமைப்பு மற்றும் சிரிய – குர்தீஷ் இயக்கமான YPG ஆகியவைகளின் மையங்கள் குறிவைத்து விமானத்தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
கொபானெ, ரக்கா, ஹசாக்கா, அலெப்போ நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25 சுற்றுக்கள் விமானத்தாக்குதல் நடந்ததாக அப்பிராந்தியத்தில் செயற்படும் மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா – வின் 51 சட்ட வரிகளிலிருக்கும், “தனது எல்லைகளுக்குள் பாதுகாப்பை நிறுவுவதற்கான உரிமை,” என்றிருப்பதை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சு தனது தாக்குதலுக்கான காரணமாகத் தெரிவித்திருக்கிறது. தமது நாட்டுக்குள் நுழைந்து தாக்கும் குர்தீஷ் இயக்கங்களின் முக்கிய மையங்களைத் தாக்கி அவர்களை அழிப்பதே தனது நோக்கம் என்று துருக்கி குறிப்பிடுகிறது.
“அந்தச் சாத்தான்களின் குரோதமான செயல்களுக்குப் பதிலடி கொடுக்கும் காலம் வந்திருக்கிறது,” என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அக்கார் தனது அறிக்கையில் தெரிவித்தார். அவர்களின் இராணுவத் தளங்களிலிருந்து தாக்குதல் நடத்தும் விமானங்கள் புறப்படுதல், அவற்றை அமைச்சரும் உயரதிகாரிகளும் தமது உத்தரவுகளால் செயற்படுத்துதல் ஆகியவற்றைக் காட்டும் வீடியோ படங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இதேபோன்று பல தாக்குதல்களையும் துருக்கி 2016 இன் பின்னர் சிரியாவுக்குள் நுழைந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்