ஜேக்கப் ஸூமாவைச் சிறையிலிருந்து வெளியேற அனுமதித்தது தவறு என்றது தென்னாபிரிக்க உச்ச நீதிமன்றம்
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா செப்டெம்பரில் மருத்துவத் தேவையக் காரணம் காட்டிச் சிறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். அந்த அனுமதி அவருக்குக் கொடுக்கப்பட்டது தவறு என்று குறிப்பிட்டு அவரை உடனடியாக மீண்டும் சிறைக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.
ஸூமாவின் ஆட்சிக்காலத்தில் அவரும் அவருடன் சேர்ந்த ஒரு கூட்டமும் சேர்ந்து நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்ததாகப் பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அவரையும், வேறு சில ஊழல் சகாக்களின் நடவடிக்கைகளையும் விசாரிக்க நீதிமன்றம் சாட்சி சொல்ல வருமாறு ஸூமாவுக்கு உத்தரவிட்டது. அவரோ, நீதிமன்றத்திற்குச் சென்று சத்தியப்பிரமாணத்தின் கீழ் சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். நீதிமன்றத்தை அவமதித்த காரணத்துக்காக அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கட்டாயமாகச் சிறைக்கனுப்பப்பட்டார்.
தனக்குக் கொடுக்கப்பட்ட 15 மாதச் சிறைத்தண்டனையில் ஒரு சிறு பாகத்தையே சிறைக்குள் கழித்த அவர் 2021 செப்டெம்பரில் மருத்துவத்துக்காக என்று காரணம் காட்டித் தற்காலிகமாக வெளியேறினார். அதையே தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து உடனடியாகச் சிறைக்குச் செல்ல உத்தரவிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்