கத்தாரில் வெற்றிக்கிண்ணத்தைத் தூக்குபவருக்கு விற்க அனுமதிக்கப்படாத பியர் முழுவதும் பரிசாகக் கிடைக்கும்.

சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச உதைபந்தாட்ட மத்தியக் குழு கத்தாரில் உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்துவதென்று முடிவு செய்ய உடனேயே பியர் விற்பனை பற்றிய கேள்வியும் எழும்பியது. உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு அதைக் கண்டு களிக்கும்போது கையிலொரு பேணியில் நுரையெழும்பும் பியர் இணையாக இருக்கவேண்டுமென்பது பழக்கம். ஒரு அராபிய நாடு பொது இடத்தில் பியர்களை விற்க அனுமதிக்குமா என்ற கேள்விக்கு கத்தார் நீண்ட காலமாக “ஆம்” என்றே பதிலளித்து வந்தது.

உதைபந்தாட்ட மோதல்கள் நடக்கும் அரங்குகளின் வளாகங்களில் பியர் விற்க ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக கத்தார் உதைபந்தாட்டப் போட்டிகளைப் பரிபாலனம் செய்யும் குழு அறிவித்திருந்தது. அமெரிக்க நிறுவனமான பட்வைசருக்கு [[Budweiser]பியர் விற்பனைக்கான அனுமதியும் ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. முதலாவது மோதல் தொடங்கும் நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு திடீரென்று மாறியது.  

கத்தார் அரச குடும்பத்தினரின் நச்சரிப்பைத் தாங்காமல் சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியம் உதைபந்தாட்ட மோதல்கள் நடக்கும் இடங்கள் எதிலும் பியர் விற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது. 2022 மட்டுமன்றி 2026 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கும் உபயதாரராக இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான பட்வைசர் அந்த விற்பனைக்கான ஒப்பந்தம் செய்துகொண்டு பெரும் தொகையைக் கொடுத்திருந்தது. அதன் பெறுமதி 112 மில்லியன் டொலர்களாகும்.

தற்போது பியர் விற்கமுடியாத நிலையில் பட்வைசர் ஒப்பந்தத்தை ஏமாற்றியதற்காக சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியத்திடம் நஷ்ட ஈடு கோரியிருக்கிறது. அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் நீதிமன்றம் போகவும் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. 

அதேசமயம் விற்பனைக்காகக் கத்தாருக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் 75 மில்லியன் டொலர் பெறுமதியான பியர் விற்கப்படாமல் தேக்கப்பட்டிருக்கிறது. தன்னிடமிருக்கும் விற்கப்படாத பியர் அவ்வளவையும் வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றும் நாட்டின் தேசிய அணிக்கே பரிசாகக் கொடுத்துவிடுவதாக பட்வைசர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *