உலகக்கோப்பையின் உபயகாரர்களின் அணியே முதல் முதலாகப் போட்டியிலிருந்து வெளியேறும் அணியாகியது.
வெள்ளிக்கிழமையன்று நடந்த உலகக்கோப்பை மோதல்களின் பின்னர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறப் போகும் அணிகள் எவரென்பது மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. தனது இரண்டாவது மோதலில் செனகலை எதிர்கொண்ட கத்தார் தேசிய அணி அவர்களிடம் 1 – 3 இலக்கத்தில் தோல்வியைத் தழுவியது. அதன் மூலம் அந்த நான்கு நாடுகளின் குழுவில் கடைசி இடத்தையே பெற்ற கத்தார் மேலுமொறு மோதலைச் சந்திக்கவிருப்பினும் அடுத்த கட்ட மோதல்களில் பங்குபெற முடியாது என்பது தெளிவாகியது. கத்தார் தனது மூன்றாவது மோதலில் நெதர்லாந்தை எதிர்கொள்ளும்.
நெதர்லாந்துக்கும் ஈகுவடோருக்கும் நடந்த மோதலில் நெதர்லாந்து எதிர்பார்த்த அளவுக்குத் திறமையைக் காட்டவில்லை. தமது முதலாவது மோதலில் வெற்றிபெற்ற ஈகுவடோர் அணி நெதர்லாந்துக்குச் சவாலாக விளையாடித் திகைக்கவைத்தது. முதலாவது கோலை நெதர்லாந்து போட்டாலும் சுதாரித்துக்கொண்டு தாமும் நெதர்லாந்தின் வலைக்குள் பந்தைப் போட்டு 1 – 1 என்று நிலையைச் சமப்படுத்திக்கொண்டனர். முதலாவது மோதலிலேயே 2 தடவை கோல்கள் அடித்த என்னர் வலன்சியா நெதர்லாந்துக்கு எதிராகவும் ஒரு கோலைப் போட்டு இந்த உலகக்கோப்பை மோதல்களில் அதிக கோல்கள் போட்ட வீரர் ஆகினார்.
சாள்ஸ் ஜெ போமன்