அரசை எதிர்த்து நடத்தத் திட்டமிட்டிருந்த “நீண்ட யாத்திரை” கைவிடப்பட்டதாக இம்ரான் கான் அறிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தது முதல், புதியதாகப் பதவியேற்ற அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து, வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் இம்ரான் கான். அவைகளில் முக்கியமானவை அவர் தனது கட்சி ஆதரவாளர்களை ஒன்று திரட்டி நடத்து யாத்திரைகள், ஊர்வலங்களாகும். அப்படியான ஒரு நீண்ட யாத்திரையை இஸ்லாமாபாத் நகரை நோக்கி நடத்தத் திட்டமிட்டிருந்ததை நிறுத்தியிருப்பதாக இம்ரான் கான் அறிவித்திருக்கிறார்.
மே மாதத்தில் அதுபோன்ற ஒரு ஊர்வலம் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்டு வன்முறையில் முடிந்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் பாகிஸ்தான் பஞ்சாப் பிராந்தியத்தில் ஊர்வலமொன்றில் பங்குபற்றும்போது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லாவிட்டாலும் கால்களில் சுடப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கச் சில சக்திகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையின் அறிக்கை குறிப்பிட்டிருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆமர் பாரூக் தெரிவித்தார். தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் திட்டங்களில் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் சபாஷ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா, இராணுவத் தளபதி பைசல் நஸீர் ஆகியோர் மீது இம்ரான் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவர் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.
ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான பிறகு முதல் தடவையாக சனிக்கிழமையன்று ராவல்பிண்டியில் நடந்த கூட்டமொன்றில் அவர் ஆதரவாளர்கள் முன் தோன்றினார். ஊர்வலம் நடத்துவது நாட்டை ஸ்தம்பிக்கச் செய்து நாட்டின் ஏற்கனவே மோசமான பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கும் என்று அவர் கூறினார். அதனால், நாட்டின் நன்மை கருதித் தான் திட்டமிட்டிருந்த ஊர்வலத்தை நிறுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சியான தஹ்ரீக் ஏ இன்சாப் வைத்திருக்கும் இடங்களிலிருந்து ராஜிநாமா செய்யவிருப்பதாகவும் இம்ரான் கான் அறிவித்தார். தற்போது இருக்கும் அரசியல் நிலைப்பாடு ஊழல்களால் அமைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர் அப்படியான ஒரு அமைப்பில் தான் பங்குகொள்ள விரும்பவில்லை என்றார். பாராளுமன்ற இடங்களைக் கைவிடுவதன் மூலம் நாட்டில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வைப்பதே தன் நோக்கம் என்றார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்