பிரிட்டிஷ் – சீனா வர்த்தகத்தின் பொற்காலம் முடிவடைந்ததாக ரிஷி சுனாக் தெரிவித்தார்.
சீனாவின் அரசியல் தலைமை மென்மேலும் தனது சர்வாதிகாரத் தன்மையை அதிகரித்து வருவது, பிரிட்டனின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்பாடாகி வருவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளுக்கு அவை சவாலாகியிருக்கின்றன என்று குறிப்பிட்டார் பிரதமர் ரிஷி சுனாக். அதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தக உறவுகளுக்கான பொற்காலம் முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சராக இருந்த ஜோர்ஜ் ஒஸ்போர்ன் 2015 இல் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றிப் பேசியபோது சீனா மேற்கு நாடுகளிடையே பெறக்கூடிய மிகச் சிறந்த வர்த்தகக் கூட்டு ஐக்கிய ராச்சியமே என்று குறிப்பிட்டிருந்தார். இருவரும் சேர்ந்து வர்த்தகத்தில் ஒரு பொற்காலத்தை உருவாக்கலாம் என்று ஒஸ்போர்ன் தனது எண்ணத்தை வெளியிட்டிருந்தார்.
நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சீனாவின் அரசியல் நோக்கு, சமூக மாறுதல்கள் உண்டாகும் என்று கணித்தது தவறான எண்ணம் என்று ரிஷி சுனாக் தெரிவித்தார். உலகின் சகல பாகங்களிலும் தனது பன்முகச் செல்வாக்கை அதிகரிக்க சீனா ஒவ்வொரு மட்டத்திலும் செயற்பட்டு வருவதால் தாம் ஏமாற்றமடைந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சமீபத்தில் சீனாவில் நடந்த ஆளும் கொம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிடல் மாநாட்டில் தலைவர் ஷீ யிங்பிங் தனது விமர்சகர்களை ஒடுக்கிவிட்டு மேலும் 5 வருடங்கள் ஆட்சியைப் பிடித்திருந்தார். உலக நாடுகளெல்லாம் கொவிட் முடக்கங்களை ஒழித்துக் கட்டியிருக்க சீனா மட்டும் தொடர்ந்தும் நாட்டில் ஒருவருக்கும் அவ்வியாதித் தொற்று இருக்கலாகாது என்று கணக்கிட்டுச் செயற்படுகிறது. அதனால் தமது அன்றாட வாழ்வில் ஏற்படும் தொல்லைகளால் அலுத்துப்போன மக்கள் கடந்த வார இறுதியில் பல நகரங்களிலும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினார்கள்.
மக்களின் தொல்லைகள், பொருளாதாரம், வர்த்தகத்துக்கான இடையூறுகளைக் கவனிக்காமல் ஷீ யின்பிங் கொவிட் எங்கும் காணப்படலாகாது என்ற தனது கோட்பாட்டையே ஒற்றைக்காலில் பிடித்துக்கொண்டிருப்பதை அடுத்தே ரிஷி சுனாக்கின் மேற்கண்ட கருத்து வெளியிடப்பட்டதாக தெரியவருகிறது. அவரது கட்சிக்குள்ளிருந்தும் சீனாவுடனான உறவுகளை மட்டும்படி கோரிக்கைகள் பரவலாக எழுந்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்