2019 உயிர்த்த ஞாயிறு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் 12 வீடுகளை வழங்கியது கத்தோலிக்க திருச்சபை.

கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கொம் ரஞ்சித் பங்குபற்றிய நிகழ்ச்சியொன்றில் உயிர்த்த ஞாயிறன்று குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு புதியதாகக் கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் கரிட்டாஸ் Antoniana of Padua அமைப்பின் நிதி மூலம் அந்த வீடுகள் கட்டப்பட்டன. இதற்கு முன்னரும் அக்குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒரு சாராருக்கு வீடுகள் சில கட்டிக் கையளிக்கப்பட்டன. 

2019 இல் நீர்கொழும்பின் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் அத்திருநாளைக் கொண்டாட வந்தவர்களிடையே வெடித்த அந்தக் குண்டு அவர்களில் 213 பேரைக் கொன்றழித்தது. அக்குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் யார் என்பது பற்றிய தெளிவான பதில்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

“அக்குண்டுவெடிப்பின் பின்னணியிலிருப்பவர்கள் தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களானால் அவர்களை நாம் மன்னிக்கத் தயார்,” அந்த நிகழ்ச்சியில் அதி மேற்றிராணியார் மல்கொம் ரஞ்சித் தெரிவித்தார். அவர் மேலும் பேசியபோது, “அக்குண்டு வெடிப்பின் காரணகர்த்தாக்கள் யாரென்று பகிரங்கமாக, ஒழுங்கான முறையில்  விசாரிப்பதாக அரசு அறிவித்திருந்தது. அந்த விசாரணை முடிந்து அறிக்கை வெளியிடப்பட்டதும், அதை எப்படிக் கையாள்வது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா என்னிடம் வினாவினார்,” என்று குறிப்பிட்டார்.

குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை விபரங்களை முழுசாக வெளியிடாத அரசை வன்மையாகக் கண்டித்த் அவர் தனக்கு அவ்விபரங்கள் பகிரங்கமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

வீடுகளைப் பெற்றுக்கொண்டவர்கள் சார்பாக அவர்களில் ஒருவரான  தர்ஷினி வீரபத்திரன், “இது ஒரு மகிழ்ச்சியான நாள். இந்த வீட்டை எங்களுக்குக் கட்டித் தந்தவர்களுக்கு நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *