மாவீரர் நாளுக்காகத் தீபங்களை ஏற்ற ஒன்றுகூடியவர்களை ஆயுதபாணியாக இராணுவத்தினர் விரட்டினர்.

முல்லைத்தீவில் கடைசிப் போர் நடந்த இடங்களில் மாவீரர் தினத்தையொட்டி,  இறந்து போனவர்களை நினைவுகூர அவர்களுடைய உறவினர்களும், அப்பகுதி வாழ் தமிழர்களும் கூடியிருந்தனர். 2019 ம் ஆண்டு ஜனாதிபதியால் தடை செய்யப்பட்ட அந்த நினைவு நாளை நாளை அம்மக்கள் அனுசரிக்க அனுமதிக்காமல் அங்கு வந்த இராணுவ வீரர்கள் விரட்டினார்கள் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

வல்வெட்டித்துறையில் விளையாட்டு மைதானமொன்றில் மாவீரர் நினைவு நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் பங்கெடுக்க முயன்ற நூற்றுக்கணக்கானவர்களை இராணுவத்தினர் மைதானத்தினுள் நுழைய விடாமல் தடுத்தனர். அவர்களில் சிலர் மட்டும் பின்பு உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தனித் தமிழ் ஈழம் கோரி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 1970 ம் ஆண்டுகள் முதல் போராடி வந்தனர். சிறீலங்கா இராணுவத்தினருடனான அவர்களுடைய போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்காக 1980 களில், நவம்பர் 27 ம் திகதி மாவீரர் நினைவு தினமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருடாவருடம் கொண்டாடப்பட்டும் வந்தது. சுமார் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானவர்களின் உயிர்களைக் குடித்த அந்தத் தமிழ் ஈழப் போர் 2009 ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது.

முல்லைத்தீவில் அனுசரிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்ச்சியைக் கண்காணிக்க அங்கே தமிழ்ப் பத்திரிகை நிருபர்களும் சமூகமளித்திருந்தனர். அங்கே கூடியவர்களை விரட்டிய இராணுவத்தினர் பத்திரிகையாளர்களை கம்பிகளான சவுக்குகளால் அடித்து விரட்டியதாக “பத்திரிகை நிருபர்களின் அமைப்பு,“ குற்றஞ்சாட்டியிருக்கிறது. அதுபற்றிப் பத்திரிகையாளர்கள் அந்த நகரப் பொலீசாரிடம் பதிவுசெய்திருக்கிறார்கள். தாம் அதைப்பற்றி விசாரித்து வருவதாகப் பொலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்