“செவலை சாத்தா” காலத்திற்கேற்ற நாவல்

நாகர்கோவில் இராணிதோட்டம் பாபுஜி அரங்கில் புலம் பதிப்பகத்தின் வெளியீடான கிருசுணகோபால் எழுதிய “செவலை சாத்தா”நாவல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு அணுசக்தி எதிர்ப்பாளரும்,பசுமை தமிழகம் கட்சியின் நிறுவனர்/ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப.உதயகுமாரன் தலைமை தாங்கி பேசினார்.அவர் தனது உரையில்:சூழலியல் குறித்தான அறிவார்ந்த தளமானது தமிழகத்தில் எடு படாமல் மடங்கி போய் உள்ளது.உலகளாவிய அளவில் கடல் நீர் புவி வெப்பமயதாலால் உயர்ந்து வருகிறது.மக்களுக்கு எதிரான அணுசக்தி எரி உலைகள்,உள்பட அழிவு ஏற்படுத்தும் திட்டங்களை அரசுகள் ஏற்படுத்துகின்றனேயொழிய பயனுள்ள இயற்கை சூழலியல் சம்பந்தமாய் எந்த திட்டங்களும் இல்லை.வடமேற்கு பருவமழையின் தீவிரமானது நின்ற பாடில்லை.மழை நீரை தேக்கும் ஏரி,குளங்கள் என எல்லா வகையான இயற்கையின் நீர் வழித்தடங்கள் அழிக்கப் பட்டு விட்டன.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை விட்டு 15-இலட்சம் பேர் வெளியேறக் கூடும் என சூழலியளாளர்கள் தெரிவிக்கின்றனர்.நில அதிர்வு,கடல் நீர் மட்டம் உயர்வு,புயல் போன்ற பேரிடர்கள் தொடர்வதால்தான் மக்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் என்கின்றனர்.உலக அளவில் சென்னை பெருநகரம் ஏழாவது இடத்தில் இயற்கை சீற்றத்தை எதிர் கொள்ள முடியாத வலுவற்ற இடத்தில் உள்ளது.

அன்பு தம்பி கிருசுணகோபால்-ன் “செவலை சாத்தா”நாவலானது எதார்த்தத்தை பேசுகிறது.அணுஉலையின் ஆபத்தை எடுத்துரைக்கிறது.இயற்கை சூழலியல் பேணுதலை சொல்கிறது என்றார்.

இதில் சாகித்ய அகாதெமி விருதாளர் சோ.தர்மன் பேசியதாவது: இன்றைய இலக்கிய உலகுக்கு நாவல் அதையடுத்து சிறுகதைகள்,கட்டுரை படைப்புகளுக்குதான் தேவையும்,வாசிப்பும் அதிகரித்துள்ளது.எனவே புதிதாய் எழுத வருவோர் இவ்வடிவங்களை தேர்ந்தெடுப்பதுதான் சிறப்பு.
கிருசுணகோபால் எழுதியுள்ள “செவலை சாத்தா”நாவல் பேரழிவை ஏற்படுத்தும் அணு உலை உள்பட இங்கு நம் மண்ணில் அழித்தொழிக்கப் படும் இயற்கை பேரழிப்பையும் சமரசமின்றி சொல்லி போகிறது.காலத்துக்கேற்ற படைப்பை தந்துள்ளார் கிருசுணகோபால்.அதனை திறம்பட செம்மையுடன் வெளியிட்டுள்ளார் தம்பி புலம் லோகநாதன்.இருவருக்குமே நன்றிகளை சொல்கிறேன்.

இங்குள்ள ஆளுமதிகார அரசுகளுக்கு நீர்த்தடங்கள்/இயற்கைச் சூழலியல் குறித்தெல்லாம் எக்கவலையும் இல்லை.அறிவார்ந்த சமூகத்தின் ஆலோசனைகளையும் இவ்வரசுகள் செவி மடுப்பது இல்லை.தம்பி சுப.உதயகுமார் அது குறித்து ஆதங்கம் கொண்டார்.இந்த அறிவுக்கும்,தமிழகத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.அவர் அணு உலையை எதிர்த்து யாருக்காக போராடினார்?அவருக்காக, அவரது குடும்பத்துக்காகவா?நமக்காக,நம் தலை முறையினர் தழைத்திருக்க வேண்டுமென்றல்லவா போராடினார்.அவரை போன்ற சூழலியல் போராளிகளை காய படுத்துவது தமிழகத்துக்கே இழுக்காகும்.வரப்போகும் இலக்கிய படைப்புகள் இயற்கை சூழலியல்,அது சார்ந்த அரசியல் மற்றும் போராட்டங்களை பதிவு செய்ய வேண்டும்.அந்த வகையில் இந்த “செவலை தாத்தா”நாவல் முதல் கண்ணியை இட்டுள்ளது.இனி வரும் படைப்புகள் இந்த கண்ணியை பற்றி பிடித்து அதிகம் எழுதுதல் முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.

நாவலாசிரியர் பொன்னீலன்:இந்த படைப்பாளி எப்போதுமே புனைவிலக்கியம் சார்ந்து நவீனத்துவ படைப்புகளைதான் இதுநாள் வரை கொண்டு வந்தார்.இப்போது எதார்த்தமாய் தன் மொழியை கொண்டு சிறப்பான நாவலை தந்துள்ளார்.கூடங்குளம் போர்ட்டத்துக்கு நானும் ஆதரவாய் இருந்தேன்.அந்த போராட்டத்தை முன்னெடுத்து மக்கள் சக்தியாய் மாற்றிய பெரும் பங்கு நம் போராளி சுப.உதயகுமாரனையே சாரும்.சமகால படைப்பாளியர் இது போன்ற படைப்புகளை படைத்திட அன்பான வாழ்த்துக்கள்.என்றார்.

இந்நிகழ்ச்சியில் நாவலை சோ.தர்மன் வெளியிட்டார்.தக்கலை ஐ.கென்னடி பெற்றுக் கொண்டார்.நிகழ்வில் எழுத்தாளர்கள் குமாரசெல்வா,இடலை அசன் இலக்கிய விமர்சகர் பிரேம்குமார் ஆகியோர் நாவல் குறித்து பேசினர்.முன்னதாக இலைகள் இலக்கிய இயக்கம் குரு.ராசதுரை வரவேற்று பேசினார்.கிருசுணகோபால் ஏற்புரையாற்றினார்.முடிவில் து.கோபால் நன்றி கூறினார்.நிகழ்ச்சியை ஜவஹர்ஜி தொகுத்து வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகள் இலைகள்,காலகட்டம்,தமிழ்வானம் இலக்கிய அமைப்புகள் செய்து இருந்தன.

எழுதுவது: தமிழ்வானம் சுரேஷ்