மேக மோகம்

மழை மேகங்கள் தம் வடிவுகளில்
மகிழ்வு கொள்ளுமா…..

மெல்ல மெல்லப்பூத்து
மோகன ரூபம்கொண்டு
பின் கலைந்து…..

வடிவம் மாற்றி
வண்ணம் மாறி
சூரியஒளியில்
மிளிர்ந்து,
சந்திர
காந்தத்தில் நெகிழ்ந்து
காற்றில் அலைந்து
மழையாய்மாறும் அந்த மழை மேகத்திற்குள் தான்…..

சப்தங்களின் அரசனான இடியும்,
பிரகாசத்தின் அரசியான மின்னலும் வாழுகின்றனர்….

மழை மேகத்திற்குள் தான்
ஏழுநிற வானவிற்களும்
எண்ணற்ற வெண்முத்துகளும்
புதைந்து திரிகின்றன….

மழை மேகத்திற்குள்தான்
உயிர்களின் உயிர்ப்பும்,
உலகத்தின் யாவும்
கருவாகித் தகிக்கின்றன….

மழை மேகத்திற்குள் தான்
என்கனவுகளும் என்கற்பனைகளும்
மிதந்து அலைகின்றன….

என்றோ ஒருநாள்…..
நானும் மழைமேகத்தில்
பயணிக்க…..

என்றேனும்
ஓர்நாள்
நானே மழை மேகமாக….
மோகம் கொள்கிறேன்….

எழுதுவது: தர்ஷிணி மாயா