அடிமைகள் வியாபாரத்துக்காக மன்னிப்புக் கேட்பதை டச்சுக்காரர்களில் பாதிப்பங்கினர் விரும்பவில்லை.
டிசம்பர் 19 திகதி நெதர்லாந்து தனது சரித்திரத்தில் அடிமைகளை வாங்கி விற்ற இருண்ட காலத்துக்காக உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கேட்கத் திட்டமிட்டிருக்கிறது. அது பற்றி நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அறிய நாட்டின் தேசிய ஒலிபரப்பு மையம் கருத்துக் கணிப்பு நடத்தியது. 49 % டச்சுக்காரர்கள் அதை விரும்பவில்லை என்று அதிலிருந்து தெரியவருகிறது.
1600 ம் ஆண்டின் ஆரம்பகாலத்திலிருந்து 1800 இன் கடைசிப் பகுதிவரையும் டச்சுக்காரர்கள் அடிமைகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுடைய வியாபாரத்தின் மூலம் சுமார் 500,000 – 600,000 அடிமைகள் விற்கப்பட்டிருக்கிறார்கள். அத்திலாந்திக் சமுத்திரத்தின் இரண்டு பக்கங்களிலும் அவர்களின் வர்த்தகம் அச்சமயத்தில் கொடிகட்டிப் பறந்தது.
கடந்த வருடத்தில் 55 % டச்சுக்காரர்கள் அந்த மன்னிப்புக் கேட்டலை எதிர்த்தார்கள். அடிமை வர்த்தகத்துக்காக மன்னிப்புக் கேட்பதை விரும்புகிறவர்கள் 31 விகிதத்திலிருந்து 38 ஆக அதிகரித்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் வாழும் வெளிநாட்டுப் பின்புலம் இருப்பவர்களில் பெரும்பாலானோர் டச்சு அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதை ஆதரிக்கிறார்கள்.
டிசம்பர் 19 ம் திகதி நெதர்லாந்தின் ஏழு அமைச்சர்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகள் உலகின் 8 நாடுகளில் நடைபெறும். அந்த நிகழ்ச்சிகளில் நெதர்லாந்து அரசின் பிரதிநிதிகள் தமது நாட்டின் கறைபடிந்த அந்த சகாப்தத்தில் நடந்தவைக்காகப் பகிரங்க மன்னிப்புக் கோருவார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்