ஜனாதிபதி கைது செய்யப்பட்ட பெருவில் மீண்டும் தேர்தல் வேண்டுமென்று போராடும் மக்கள்.
பெரு நாட்டவரின் முதலாவது பெண் ஜனாதிபதி டீனா பூலார்ட்டேவின் பதவிக்காலம் மிகக் குறுகியதாகவே இருக்குமென்று தோன்றுகிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரும்பாலான பிரதிநிதிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர் பதவி நீக்கப்பட்டார். அதையடுத்து அவரைப் பொலீசார் கைது செய்து காவலில் வைத்தார்கள்.
பதவி விலக்கப்பட்ட ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோவுக்கு ஆதரவாக நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துத் தொடர்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியைப் பதவியிறக்கக் காரணம் தமது ஊழல்களை மறைக்கவே என்று கூறிவரும் பெரும் மக்கள் கூட்டத்தை அடக்க பொலீசார் முயன்று வருகின்றனர். போராட்டக்காரர்களும் பொலீசாருக்கும் ஆங்காங்கே கைகலப்புகள் ஏற்பட்டதில் சிலர் இறந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
மக்களின் பெரும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக புதிய ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்துகொண்ட டீனா பூலார்ட்டே 2026 இல் நடக்கவேண்டிய தேர்தலை முன்போட்டு 2024 ஆரம்பத்திலேயே நடத்துவதாக உறுதியளித்தார். அந்தத் தேர்தல் திகதியானது நீண்ட காலம் தள்ளியே இருக்கிறது என்று குறிப்பிடும் எதிர்ப்புக்காரர்கள் ஆறு மாதத்துக்குள்ளேயே தேர்தலை மீண்டும் நடத்திப் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும்படி கோரிவருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்