கடினமான வானிலை மியான்மார் அகதிகளைச் சிறீலங்காவை அடுத்தும் கரையேற வைக்கிறது.
மியான்மாரில் வாழும் ரோஹின்யா இனத்தவர் அந்த நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்டு அரசினால் திட்டமிட்டுத் துரத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குறிப்பிட்டு வருகின்றன. மில்லியன் பேருக்கும் அதிகமானோர் மியான்மாரிலிருந்து கடல் வழியாகத் தப்பிப் பக்கத்திலிருக்கும் இஸ்லாமிய நாடுகளில் அடைக்கலம் கோரியிருக்கிறார்கள். சமீபத்தில் மீண்டும் பலர் அங்கிருந்து கடல் வழியாக வெளியேறிக் கடும் வானிலையால் ஆங்காங்கே மாட்டுப்பட்டிருப்பதாக பக்கத்து ஆசிய நாடுகள் எச்சரித்திருக்கின்றன.
மீன்பிடிக்கப்பலொன்றில் ஏறி மலேசியாவில் அடைக்கலம் தேட முற்பட்ட 105 ரோஹின்யா அகதிகள் சிறீலங்காவின் வடக்குப் பிராந்தியத்துக்கு வெளியே கடலில் சிக்கிக்கொண்டனர். அப்பகுதி மீனவர்கள் அதைக் கடற்படைக்குத் தெரிவிக்கவே அவர்களைக் காப்பாற்றிய கடற்படையினர் காங்கேசன்துறையில் அவர்களைக் கொண்டுசேர்த்திருக்கின்றார்கள். அவர்களுக்கு உடனடியான உதவிகளைக் கொடுக்க ஐ.நா-வின் அகதிகள் அமைப்பும் சேர்ந்து செயற்பட்டு வருகிறது.
மேலும் 154 ரோஹின்யா அகதிகளை தாய்லாந்தின் கடற்பிராந்தியத்துக்குள் வியட்நாம் கப்பலொன்று கண்டு அதை அந்த நாட்டின் கடற்படையினருக்கு அறிவித்தது. அவர்கள் மியான்மார் அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு கப்பல் நிறைய ரோஹின்யா அகதிகள் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு வெளியே காணப்பட்டுக் காப்பாற்றப்பட்டிருக்கிறர்கள். மேலும் 161 பேர் கப்பலுடன் புறப்பட்டுக் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆசியான் அமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள சமீப வாரங்களில் அதிகரித்திருக்கும் ரோஹின்யா அகதிகள் வெளியேற்றம் பற்றியும் அவர்களில் பலர் கடலில் கடும் வானிலையில் சிக்கிவருவதைப் பற்றியும் எச்சரித்துக் குரலெழுப்பியிருக்கிறார்கள். பெரும்பாலும் கடும் வானிலையைத் தாங்கமுடியாத கப்பல்களில் ஏறித் தப்பியோடும் அவர்களி முதியோர், பெண்கள், குழந்தைகளும் இருக்கிறார்கள். கடலில் பல நாட்களாக மாட்டிக்கொள்ளும் அவர்களில் சிலர் காப்பாற்றப்படும்போது இறந்திருக்கிறார்கள்.
பங்களாதேஷ் மட்டுமே ரோஹின்யா அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்து வருகிறது. அங்கே அவ்வினத்தினர் குறிப்பிட்ட முகாம்களில் மட்டும் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அந்த முகாம்களில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகளால் திக்குமுக்காடும் பங்களாதேஷ் அரசு அந்த அகதிகளை மியான்மார் திரும்பவைக்க உதவும்படி ஐ.நா-விடமும் மற்ற நாடுகளிடமும் வேண்டி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்