உக்ரேனியர்களுக்கு மின்சார உதவிசெய்ய மிதக்கும் மின்சார மையங்களை அனுப்பியுதவவிருக்கும் துருக்கி.
உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் அந்த நாட்டு மக்களின் தினசரி வாழ்க்கையைச் சீரழிப்பதக்கான வகையில் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரேனின் மின்சார, நீர்வசதி மையங்களைக் குறிவைத்துத் தாக்கிவருகிறது ரஷ்யா. அதனால் நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு மின்சார வசதி அற்றுப்போயிருக்கிறது. அவர்களுக்கு உதவ முன்வருவதாக துருக்கி அறிவித்திருக்கிறது.
துருக்கியின் மின்சாரத் தயாரிப்பு நிறுவனமொன்று தம்மால் உக்ரேனின் சுமார் ஒரு மில்லியன் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தந்து உதவ முடியுமென்கிறது. அவர்கள் அதற்காகத் தமது பிரத்தியேக மிதக்கும் மின்சார மையங்களைத் துருக்கிக்கு அனுப்பிவைக்கவிருக்கிறார்கள். அந்தக் கப்பல்கள் உக்ரேனின் கருங்கடல் பிராந்தியத்தில் நங்கூரமிட்டு உக்ரேனுக்கு உதவவிருக்கின்றன.
சர்வதேச அளவில் மிக அதிகமான மிதக்கும் மின்சார நிலையங்களைக் கொண்ட Karpowerships நிறுவனம் உக்ரேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் உக்ரேனுக்குக் கப்பல்களை அனுப்புவதிலிருக்கும் பாதுகாப்புப் பிரச்சினையே மிகப்பெரிய இடையூறாக இருப்பதாக நிறுவனத்தின் நிர்வாகி சர்தார் கும்பசார் குறிப்பிடுகிறார்.
உக்ரேனுக்குப் பயணிக்கும் கப்பல்களைக் காப்புறுதி செய்ய எந்த நிறுவனமும் தயாராக இல்லை. கப்பல்களை மோல்டாவியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து உக்ரேனுக்கு உதவலாமா என்ற மாற்றுத் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்