எரிசக்தித் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது பாகிஸ்தான்.
பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலொன்றாக எரிசக்தித் தட்டுப்பாடு பாகிஸ்தானைப் பலமாகத் தாக்கிவருகிறது. மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாட்டின் பல்பொருள் அங்காடிகள், சந்தைகளை இரவு 8.30 க்கே மூடிவிடும்படி பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது. அதன் மூலம் சுமார் 273 மில்லியன் டொலர்கள் செலவு குறையும் என்று அரசு கணித்திருக்கிறது.
நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பானது ஒரு மாத இறக்குமதிக்கே போதுமானதாக இருக்கிறது. அதில் பெரும்பகுதி எரிபொருட்களை வாங்குவதற்கே செலவிடப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுக்காக விண்ணப்பித்திருக்கும் பாகிஸ்தானுக்கு அது தகுந்த தருணத்தில் கிடைக்குமென்று தோன்றவில்லை.
கல்யாண மண்டபங்கள், உணவு விடுதிகள் இரவு பத்து மணிக்கே மூடப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது. நாட்டின் பொதுநலத்துறையினர் தமது எரிபொருள் பாவனையில் 30 % ஐக் குறைக்கவேண்டும். அளவுக்கதிகமான மின்சாரத்தை உறிஞ்சும் மின்குமிழிகள், காற்றாடிகளின் தயாரிப்புகளும் பெபரவரி, ஜூன் மாதங்களில் நிறுத்தப்படவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்