இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிசுகளின் பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பதவியிழந்த இம்ரான் கான் தனது பிரதமர் காலத்தில் பெற்றுக்கொண்ட பரிசுகளின் பட்டியலை வெளியிடவேண்டும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது இம்ரான் கான் சுமார் 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களைப் பெற்று அவைகளை டுபாயில் விற்றுவிட்டதாகப் பதவியேற்றிருக்கும் புதிய பிரதமர் ஷபாஸ் ஷரீப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஒரு பிரதமர் வெளி நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அந்தந்த நாடுகளில் பெற்றுக்கொள்ளும் பரிசுப் பொருட்கள் அரச சொத்தாகவே கணிக்கப்படுகின்றன. அவைகளைப் பிரதமர் நாட்டின் அதிகாரத்திடம் ஒப்படைக்கவேண்டும். அந்தப் பரிசுகள் அரசின் கைவசம் இருக்கும் கண்காட்சியில் சேர்க்கப்படும் என்பதே வழக்கம்.

அந்தப் பரிசுப் பொருட்கள் பற்றி இம்ரான் கான் “எனது பரிசுகள் எனது விருப்பம்,” என்று பதிலளித்திருக்கிறார். 

“நாட்டின் பிரதிநிதியாகப் பெற்றுக்கொள்ளும் பரிசுப்பொருட்களைத் தனதாக்கிக் கொள்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது”, என்று பதியப்பட்டிருக்கும் வழக்கை அடுத்தே நீதிமன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அது மட்டுமன்றி கடந்த 20 வருடங்களில் வெளிநாட்டு விஜயங்களின்போது அரச அதிகாரிகள் பெற்றுக்கொண்ட பரிசுப் பொருட்களையும் கைப்பற்றி  பட்டியலோடு வெளியிடும்படி அரச நீதிமன்ற உயரதிகாரியிடம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இம்ரான் கான் தனது ஆட்சிக்கால விஜயங்களின்போது 58 பரிசுகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *