பாகிஸ்தான் தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்க முன்வந்திருக்கிறது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர பாகிஸ்தான் தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு திக்குமுக்காடுகிறது. சமீப மாதங்களில் அந்த இயக்கத்தினரின் தாக்குதல்கள் பாகிஸ்தான் பகுதியில் அதிகரித்திருக்கின்றன. அவ்வியக்கத்துக்கு எதிரான பாகிஸ்தானின் போரில் கைகொடுக்க அமெரிக்கா முன்வந்திருக்கிறது.
“ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் எதிர்கொண்டிருக்கும் தீவிரவாதம் பாகிஸ்தானை மட்டுமன்றி மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான எங்களுடைய போரில் பாகிஸ்தானில் அமைதியைப் பேணுவதும் முக்கியமானது. எனவே, பாகிஸ்தானுடனான எமது உறவில் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம்,” என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
“பாகிஸ்தானுக்கு உதவுவதாகச் சொல்லிக்கொண்டு எங்களுடைய பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடாதிருக்கும்படி எச்சரிக்கிறோம்,” என்று பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் நூர் வலி மசூத் தனது செவ்வியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பிலவால் பூட்டோ சர்தாரி, ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான உதவிகளைக் கோரியிருக்கிறார். அதன் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்