4 நாட்கள், 15 வாக்கெடுப்புக்களின் பின்னர் ஒரு வழியாக கெவின் மெக்கார்த்தி சபாநாயகராகத் தெரிவானார்.
நவம்பரில் நடந்த தேர்தல்களில் அமெரிக்காவின் பாராளுமன்றத்தை ரிபப்ளிகன் கட்சியினர் கைப்பற்றியதாக ஆர்ப்பரித்தார்கள். ஆனால், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை ஏற்றுக்கொள்ளவோ, பாராளுமன்றம் முடிவுகளை எடுக்கமுடியாமல் போனது அக்கட்சியினருக்கு. காரணம், கட்சிக்குள்ளே இன்னொரு கட்சி இருப்பதை சபையின் சபாநாயகர் தெரிவு காட்டிக்கொடுத்தது. அடுத்தடுத்து நான்கு நாட்கள் பதினைந்து சுற்று வாக்கெடுப்புக்கள் நடந்தபின்னர் ரிபப்ளிகன் கட்சியினரால் உத்தியோகபூர்வமாக அப்பதவிக்கு வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்பட்ட கெவின் மக்கார்த்தி தேவையான இலக்க ஆதரவைப் பெற்றுச் சபாநாயகரானார்.
ரிபப்ளிகன் கட்சியினரிடையே இருக்கும் வலதுசாரிகள், டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் சேர்ந்து மக்கார்த்திக்கு எதிராக வாக்களித்து அவரைத் தோற்கடிக்கவைத்துக்கொண்டிருந்தனர். ஆரம்பக் கட்டத்தில் எதிர்க்கட்சியான டெமொகிரடிக் கட்சியினரின் சபாநாயகர் வேட்பாளர் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ரிபப்ளிகன் கட்சியின் மக்கார்த்தியை விட அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். 218 வாக்குகளைப் பெறவேண்டிய நிலையில் மக்கார்த்திக்கு 202 வாக்குகளும் டெமொகிரடிக் கட்சியின் வேட்பாளருக்கு 212 வாக்குகளும் கிடைத்து வந்தன.
சுமார் 13 சுற்றுக்கள் வாக்கெடுப்பு நடந்த பின்னரே மக்கார்த்திக்குத் தேவையான இலக்கத்தை நோக்கி அவர் நகர ஆரம்பித்திருந்தார். அமெரிக்கப் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தேர்வுக்காக இத்தனை அதிகச் சுற்றுக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை கடந்த 164 வருடங்களில் நடந்ததில்லை என்ற சாதனையை நிகழ்த்திய இந்தச் சம்பவம் ரிபப்ளிகன் கட்சியினரிடையே இருக்கும் பெரும் பிளவுகளைத் துகிலுரிந்து காட்டியிருக்கிறது.
தனக்குத் தேவையான வாக்குகளைப் பெறுவதற்காக மக்கார்த்தி தனது கட்சிக்குள்ளிருக்கும் எதிரணியினரின் பல கோரிக்கைகளில் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. சபாநாயகர் தேர்வில் நடந்த இந்தக் கூத்தானது பாராளுமன்றம் அடுத்தடுத்து எடுக்கவிருக்கும் முக்கியமான முடிவுகளிலும் தொடரலாம், அதனால் அமெரிக்கப் பாராளுமன்றம் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் இயக்கமின்றிப் போகலாம் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் கூறுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்