உதைபந்தாட்டம் காண பஸ்ராவுக்கு வந்திருந்த குவெய்த் பிரதிநிதிகள் அரங்கத்திலிருந்து வெளியேறினர்.
ஈராக்கின் பஸ்ரா நகரில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்களின் முதலாவது நாளே முக்கிய பிரமுகர்கள் பார்வையாளர் பகுதியில் சச்சரவுகள் உண்டாகின. அங்கே ஏற்பட்ட கைகலப்புக்களின் பின்னர் குவெய்த் நாட்டின் பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
குவெய்த் ஒலிம்பிக்ஸ் அமைப்பின் தலைவர் ஷேய்க் பகத் அல் நஸர் முக்கிய பார்வையாளர்கள் பகுதியில் சிலருடன் கைகலப்பில் ஈடுபடுவதும், அதன் பின்பு அங்கிருந்து வெளியேறுவதும் படங்களாக வெளியாகியிருக்கின்றன. அப்பகுதிக்குள் நுழைய அனுமதியில்லாதவர்கள் அங்கே நுழைந்ததால் அச்சச்சரவுகளும், கைகலப்புகளும் ஏற்பட்டதாக குவெய்த் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தமக்குத் தேவையான பாதுகாப்புக் கிடைக்கவில்லை என்று குவெய்த் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டி உடனடியாக ஈராக்கிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஈராக் முக்கிய உதைபந்தாட்ட மோதல்களை நடத்துவதிலிருந்து சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பினால் கடந்த சுமார் 40 ஆண்டுகளாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது. பஸ்ராவில் நடக்கும் மோதல்களைக் காண சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பின் தலைவர் ஜியானி இன்பன்டீனோ, கத்தாரின் ஒலிம்பிக்ஸ் அமைப்புத் தலைவர் ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் விஜயம் செய்திருக்கிறார்கள். ஈராக்கிய பிரதமர் முஹம்மது ஷீயா அல் சுடானியும் கலந்துகொள்கிறார்.
குவெய்த் 07 ம் திகதி சனியன்று கத்தார் அணியுடன் மோதவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்