பிரசிலியாவின் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் பொல்சனாரோ ஆதரவாளர்கள்.
அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்தது போலவே பக்கத்து நாடான பிரேசிலிலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறியது. ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போயும் இதுவரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதி பொல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள்ளும், நாட்டின் பாராளுமன்றத்தினுள்ளும் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 08ம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோவின் ஆதரவாளர்கள் தமது வன்முறை நடவடிக்கைகள் மூலம் நாட்டின் இராணுவம் அரசைக் கைப்பற்றவேண்டும் என்று கோரினார்கள். தேர்தலுக்கு முன்னரே அஞ்சப்பட்டபடியே பாராளுமன்றத்துக்குள்ளும், ஜனாதிபதி மாளிகைக்குள்ளும் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கே பல சேதங்களை விளைவித்தார்கள்.
பொலீசார் அவர்களை அடக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சில மணி நேரங்களாகியது. சுமார் 250 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நடந்த வன்முறையால் பலர் காயப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாரார் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனைச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சில நாட்களுக்கு முன்னரே பதவியேற்ற லூலா டா சில்வா அரசு இதுபோன்ற நிலைமை ஏற்படலாம் என்றஞ்சிக் காவலைப் பலப்படுத்தியிருந்தது. ஞாயிறன்று பிற்பகலில் சுமார் 2,000 – 3,000 பேர் காவல்களை உடைத்துக்கொண்டு குறிப்பிட்ட அரச கட்டடங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் இருந்த வளாகத்துக்குள் நுழைந்தனர். 2021 ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் செய்தது போலவே அங்கிருந்தவர்களைத் தாக்கி, அகப்பட்டதை நொறுக்கிய அவர்கள் அவற்றைப் படங்களாக எடுத்துச் சமூகவலைத் தளங்களிலும் பகிர்ந்து கொண்டனர்
அந்தச் சமயத்தில் வேறொரு நகரிலிருந்த ஜனாதிபதி லூலா டா சில்வா உடனடியான தலை நகரான பிரசிலியாவுக்குத் திரும்பினார். சாதாரணமாக நகரின் ஆளுனரின் கையிலிருக்கும் தலைநகரின் பாதுகாப்பு அதிகாரத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. நாட்டின் சரித்திரத்திலேயே நடந்திராத அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்னால் நிறுத்தித் தண்டிப்பதாக ஜனாதிபதி சூளுரைத்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்