பிரேசிலின் புதிய அரசு பதவியேற்பு வைபவத்தைக் காவல்காக்க நாட்டின் பொலீஸ் படை முழுவதும் தயாராகிறது.

கடந்த வருட இறுதிப்பாகத்தில் பிரேசிலில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப்போன ஜைர் பொல்சனாரோ இதுவரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தேர்தலில் வெற்றிபெற்ற லூலா ட சில்வா பதவியேற்கும் வைபவம் தயாராகி வருகிறது. பொல்சனாரோவின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் ஆங்காங்கே வன்முறை  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பதவியேற்பு வைபவத்தில் பாதுகாப்பை நிலைநாட்ட நாட்டின் பொலீஸ் படை முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த வார இறுதியில் நாட்டின் பெரிய விமானநிலையத்துக்கு வெளியே எரிபொருள் கொள்கலன் வண்டியொன்றுக்கருகே வெடிமருந்துகளை வெடிப்பதற்கு முயன்ற ஒருவனைப் பொலீசார் கைதுசெய்திருக்கிறார்கள். அதன் நோக்கம் ஞாயிறன்று நடக்கவிருக்கும் பதவியேற்பு விழா சமயத்தில் நாட்டில் ஒழுங்கினமையையும், பதட்டத்தையும் உண்டாக்குவதாகும். அதிர்ஷ்டவசமாக அவ்வெடிமருந்து வெடிக்கவில்லை.

பதவியேற்பு வைபவத்தில் பங்குகொள்ளவிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு எவ்வித ஆபத்துமில்லாமல் பாதுகாப்புக் கொடுக்கப்படும் என்று பதவியேற்கவிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் பிளாவியோ டீனோ அறிவித்திருக்கிறார். 

“சில தீவிரவாதிகளும், வன்முறையாளர்களும் பிரேசிலின் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்ட எடுக்கும் முயற்சிகளை வெற்றிபெற விடமாட்டோம்,” என்கிறார் அமைச்சர். வன்முறையாளர்களுக்குப் பயந்து பதவியேற்பு வைபவம் சிறிய அளவில் நடத்தப்படலாமென்ற வதந்தி பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *