கத்தார் அரசின் இலவசங்களை பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றிய பா-உ -க்கள் இருவர் ஒப்புக்கொண்டனர்.
கத்தார் அரசிடம் வெவ்வேறு வகையான லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் டிசம்பர் மாதத்தில் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து பெல்ஜிய நீதித்துறை குறிப்பிட்டவர்களின் குற்றங்கள் பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து நடத்திவருகிறது. அவர்களில் இருவர் தாம் கத்தார் அரசிடமிருந்து இலவச பயணங்களைப் பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
பெல்ஜியத்தின் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மரியா அரபெல்லா, மார்க் தரபெல்லா ஆகியோர் முறையே 2022, 2020 இல் கத்தாருக்கான இலவசப் பயணங்களைப் பெற்றிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் தாம் பெறும் இலவசங்களையும், அதற்கான காரணங்களையும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவேண்டும். அவர்கள் அந்த இலவசப் பயணங்களை மறைத்ததையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கிரேக்க பாராளுமன்ற உறுப்பினரும், உப சபாநாயகருமான ஏவா கல்லி, தனக்கும் ஊழல்களுக்கும் இருக்கும் தொடர்புகள் சிலவற்றை ஒப்புக்கொண்டிருக்கிறார். கல்லியின் தந்தை 600,000 எவ்ரோக்கள் கொண்ட பணப்பெட்டியுடன் கைது செய்யப்பட்டார். கல்லியின் வீட்டைச் சோதனையிட்டபோது மேலும் 150,000 எவ்ரோக்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தனது தந்தையிடம் ஒரு தொகை பணத்தை மறைத்துவைக்கும்படி கேட்டிருந்ததாகக் கல்லி ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது கணவரும் லஞ்ச ஊழல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகச் விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் முடிவுகளில் தமது மூக்கை நுழைத்து அவற்றைத் தமக்குச் சாதகமாக இருக்கும்படி செய்வதற்காகக் கத்தார் அரசு மிகப்பெரும் செலவைச் செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அதற்கான உடந்தைகளையே சில ஐ. ஒன்றியப் பா.உ -க்களும், உயர் அதிகாரிகளும் செய்து கத்தாரிடம் லஞ்சம் பெற்றதாக விசாரணை நடந்து வருகிறது. கத்தார் அரசு தமக்கும் அவைக்கும் சம்பந்தமில்லை என்று அடியோடு மறுத்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்