வரி ஏய்ப்பு, பொய்களுக்காக அரசியல் சுழலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் ரிஷி சுனாக்கின் கட்சித்தலைவர்.
ஐக்கிய ராச்சியத்தின் பொதுப்பணித்துறை, மருத்துவ சேவைத் தொழிலாளர்கள் உட்படப் பல துறையினரும் வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு பிரதமர் ரிஷி சுனக்குக்குத் தலைவலி ஏற்படுத்தி வருகிறார்கள். புதியதாக ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி கொன்சர்வடிவ் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நடீம் ஸவாகியின் உருவில் வந்திருக்கிறது.
நடீம் ஸவாகி கொன்சர்வடிவ் கட்சியின் முக்கிய பா.உ ஆகும். ஈராக்கிய குர்தீஷ் பின்னணியைக் கொண்ட ஸவாகி சர்வதேச கருத்துக்கணிப்பு, புள்ளிவிபர நிறுவனமான YouGov இன் நிறுவனருமாகும். தனது வருமானங்களை ஒழுங்காகக் காட்டாமல் வரிகளைக் கட்டாமல் இருந்ததற்காக தண்டம் விதிக்கப்பட்ட ஸவாகி அவற்றைப் பற்றிப் பொய் விபரங்களை நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
ஸவாகியைப் பதவியிலிருந்து விலகும்படி குரல்கள் எதிர்க்கட்சிகளிடமிருந்தும், கட்சிக்குள்ளிருந்தும் எழுந்து வருகின்றன. வெளியாகியிருக்கும் கருத்துக் கணிப்பீடு ஒன்றும் நாட்டு மக்களிடையே ஸவாகி பதவி விலகவேண்டும் என்றே விரும்புவதாகக் காட்டுகிறது. அவரோ தானாகப் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் சுனாக் கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு தடவை பொலிஸ் விசாரணை செய்யப்பட்டு தண்டம் கட்டியிருக்கிறார். கடந்த வாரம் வாகனத்தில் பெல்ட் அணியாமலிருந்த தவறுக்காகவும் தண்டம் கட்டவேண்டிய நிலைமைக்கு உள்ளானார். ஸவாகியைப் பதவியிலிருந்து விலக்கும்படி அவரிடம் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. பல முனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு ஸவாகியின் வரிகள், வருமானம் போன்றவை பற்றிய விசாரணையொன்றை நடத்த ரிஷி சுனாக் முடிவெடுத்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்