வீதிகளில் தானே ஓடும் பாரவண்டிகளை ஐரோப்பாவிலேயே முதன் முதலாக சுவீடன் அனுமதித்திருக்கிறது.

சுவீடனின் பாரவண்டி நிறுவனமான ஸ்கானியா ஐரோப்பாவிலேயே முதலாவது நிறுவனமாகத் தாமாகவே இயங்கும் பாரவண்டிகளை வீதிகளில் இயங்கவைத்திருக்கிறது. தலைநகரான ஸ்டொக்ஹோம் முதல் யொன்சோப்பிங் என்ற நகரம் வரை 300 கி.மீ தூரத்துக்கு பாரவண்டிகள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்லுதல் வழக்கமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாரவண்டிகள் தமக்குப் பின்னால் இன்னொரு கொள்கலன் தாங்கிய பகுதியையும் இழுத்துச் செல்லும் 40 தொன் வண்டிகளாகும்.

வண்டியில் சாரதி இடத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தாலும் அவர் அதை இயக்குவதில்லை. அவசரமான நிலைமையில் தேவையானால் மட்டுமே கையாள்வதற்காக இருக்கிறார். ஸ்கானியா நிறுவனத்தின் மத்திய இயக்கும் இடத்திலிருக்கும் ஒருவரே வண்டிக்குள்ளும், வண்டியச் சுற்றவரப் பொருத்தப்பட்டிருக்கும் உணரும் கருவிகள், காமராக்கள், புவியியல் கண்காணிப்பு இயக்கம் போன்றவைகளை வைத்து அவ்வண்டி இயங்குவதற்கான உத்தரவுகளைத் தனது கணனித்தொடர்பு மூலம் கொடுத்து வருகிறார்.

 தானே இயங்கும் பாரவண்டிகள் நீண்ட தூரங்களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மிகவும் ஏதுவானவை என்று அந்தத் திட்ட நிர்வாகிகள் குறிப்பிடுகிறார்கள். அப்படியான தொழில்நுட்ப வசதியானது பல பாரவண்டிச் சாரதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் செய்யும் என்றும் ஒரு கருத்து பேசப்படுகிறது. உண்மையில் பாரவண்டிச் சாரதிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு சர்வதேச அளவில் நிலவி வருகிறது. 2021 ம் ஆண்டில் சுமார் 3.6 மில்லியன் பாரவண்டிச் சாரதிகளின் இடங்கள் நிரப்ப முடியாமலிருப்பதாக சாரதிகளின் தொழிற்சங்கப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

தானாக இயங்கும் பாரவண்டிகளை நீண்ட தூரப் பாவனையில் ஈடுபடுத்துவதன் மூலம் அவைகளில் வேலைசெய்யும் சாரதிகளின் ஆரோக்கியத்த்துக்கும் உதவும். தானியங்கி வண்டிகள் மனித சாரதிகள் போன்று ஓய்வெடுக்கத் தேவையில்லை, தூங்கத் தேவையில்லை. அவை மூலம் பொருட்களைச் சரியான நேரத்தில் தேவையான இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். அத்துடன் அவைகளை இயக்கும் கண்காணிப்பு இயக்கங்கள் எந்த வீதிகளில் போக்குவரத்து அதிகமில்லை என்பதைக் கணித்து அவைகளைத் தகுந்தபடி பாவிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *