இஸ்லாமியர்களுக்கெதிராக நாட்டில் பரவிவரும் வெறுப்பை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறது கனடா.
வெவ்வேறு இன, மொழி, மதத்தைச் சார்ந்தவர்களைக் கொண்ட கனடாவில் சமீப வருடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பல வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதைத் தவிர இஸ்லாத்தை வெறுக்கும் பிரச்சாரங்களும் பொதுவாக மலிந்து வருகின்றன. அதன் காரணமாக நாட்டில் பல பிரிவினைகள் ஏற்படலாகாது என்ற எண்ணத்துடன் இஸ்லாமோபியா என்று குறிப்பிடப்படும் அத்தகைய வெறுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடிய முடிவுகளை எடுக்கும் நோக்க ஒரு பிரதிநிதியை அரசு நியமித்திருக்கிறது.
“கனடாவின் பலங்களில் ஒன்று எங்கள் சமூகத்திலிருக்கும் பன்முகக் கலாச்சாரமாகும். ஆனால் தூரதிருஷ்டமாகப் பல முஸ்லிம்களுக்கு, இஸ்லாமோஃபோபியா மிகவும் பரிச்சயமாகிவிட்டது. அதை நாம் மாற்ற வேண்டும். நம் நாட்டில் யாரும் தங்கள் நம்பிக்கையின் காரணமாக வெறுப்பை அனுபவிக்கக்கூடாது,” என்கிறார் கனடியப் பிரதமர்.
அமீரா எல்கவாபி என்ற மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் ஒருவரை பிரதமர் ஜஸ்டின் டுருடூ இஸ்லாமோபோபியாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்கும் அரச பிரதிநிதியாக அறிவித்திருக்கிறார். எல்கவாபி அரசின் அமைச்சர்கள், திணைக்களக் கோட்பாடுகளைக் கையாளுபவர்களுக்குத் தனது ஆலோசனைகளை வழங்குவார்.
எல்கவாபியை இஸ்லாமோபோபியாவை எதிர்க்கும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்ததற்காக நாட்டின் இஸ்லாமிய அமைப்பினரும், மனித உரிமை அமைப்புகளும் அரசுக்குத் தமது பாராட்டைத் தெரிவித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்