உக்ரேன் நீண்டகாலமாகக் கோரிவந்த போர்க்கவச வாகனங்கள் ஒரு வழியாகக் கிடைக்கவிருக்கின்றன.
நடந்துவரும் போரில் தன்னிடமிருக்கும் பழைய சோவியத் கால ஆயுங்கள், தளபாடங்களையே பெருமளவில் பாவித்துவருகிறது உக்ரேன். ரஷ்யாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிப்பதற்கும், எதிர்த்துத் தாக்குவதற்கும் தனக்குப் போர்க்கவச வாகனங்கள் தரும்படி கேட்டுக்கொண்டிருந்த உக்ரேனுக்கு முதல் தடவையாக அப்படியான கனரக ஆயுதங்களைக் கொடுக்க அதன் ஆதரவு நாடுகள் முன்வந்திருக்கின்றன.
உக்ரேனுக்குக் கனரக ஆயுதங்களைக் கொடுப்பது ரஷ்யாவுக்கு மேற்கு நாடுகள் மீது அந்த நாட்டுக்கு இருக்கும் கோபத்தை மேலும் தூண்டுவதற்கே வழிவகுக்கும், அதன் மூலம் போர் மற்றைய நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற காரணத்தைக் காட்டி அப்படியான ஆயுதங்களைக் கொடுப்பதை இதுவரை எல்லா நாடுகளும் தவிர்த்து வந்தன. கடந்த வாரம் நடந்த நாட்டோ அமைப்பு நாடுகளின் முக்கிய கூடலுக்குப் பின்னர் முதல் தடவையாக நேச நாடுகளின் நிலைப்பாடு மாறியிருக்கிறது.
அமெரிக்க தரப்பிலிருந்து ஆபிராம், ஜேர்மனியத் தரப்பிலிருந்து லியோபார்ட் 2 போர்க்கவச வாகனங்கள் உக்ரேனுக்குக் கொடுக்கப்படவிருக்கின்றன. தவிர நோர்வே, பின்லாந்து போலந்து ஆகிய நாடுகளும் தன்னிடமிருக்கும் ஜேர்மனியிடம் கொள்வனவு செய்யப்பட்ட லியோபார்ட் வாகனங்களை உக்ரேனுக்கு அனுப்பவிருக்கிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளும் தம்மிடமிருக்கும் அத்தகைய வாகனங்களைக் கொடுப்பதாக அறிவித்திருக்கின்றன. முக்கிய ஒன்றிய நாடான பிரான்ஸ் மட்டுமே இதுவரை தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. முதல் கட்டமாக சுமார் 20 வாகனங்களே உக்ரேனுக்குக் கிடைக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
எதிர்பார்த்ததுபோலவே, உக்ரேனுக்குக் கனரக வாகனங்கள் கொடுக்கப்படுவது ரஷ்யாவைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. அதுபற்றிக் கடுமையாக விமர்சித்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லவ்ரோவ், “இதுவரை மறைமுகமாக ரஷ்யா மீது போரில் ஈடுபட்டுவந்த மேற்கு நாடுகள் இந்த முடிவின் மூலம் நேரடியாகப் போரில் இறங்கியிருப்பதாகவே நாம் கருதுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்