நடக்கவிருக்கும் ஆசியான் அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்கு மியான்மார் வரவேற்கப்பட்டிருக்கிறது.
ஆசியான் அமைப்பின் 10 நாடுகளுட்பட ஆஸ்ரேலியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் பங்குகொள்ளவிருக்கும் கடற்பிராந்தியப் பாதுகாப்பு பற்றிய மாநாடு ஒன்று பெப்ரவரி 20 ம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது. தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் அந்த மாநாட்டில் பங்குகொள்ள மியான்மார் இராணுவமும் வரவேற்கப்பட்டிருக்கிறது.
2021 இல் மியான்மார் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை நாட்டின் இராணுவம் கவிழ்த்தது. தொடர்ந்து, பிரதமர் உட்பட்ட அமைச்சர்கள் ஆளும்கட்சி அரசியல்வாதிகளைக் கைதுசெய்தும், சிறைவைத்தும் தனது பிடியை நாட்டில் பலமாக்கிக்கொண்டது. நாட்டு மக்களின் தொடர்ந்த எதிர்ப்பை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது மியான்மார் இராணுவம். சமீபத்தில் வெளிவந்திருக்கும் பல அறிக்கைகளும் அங்கே வாழ்பவர்களின் நிலைமை மோசமாகி வருவதாகவே சுட்டிக்காட்டுகின்றன. ஜனநாயகக் கோட்பாடுகளை மதிக்காத இராணுவ அரசின் பிரதிநிதிகளை ஆசியான் அமைப்பு உட்பட்ட சர்வதேச அமைப்புகள் ஒதுக்கி வைத்திருக்கின்றன.
ஆசியாவின் கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பு, கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள, ஆபத்துகள் நீர்ப்பரப்பில் ஏற்படும்போதும் மீட்புப் பணிகளை ஒன்றுசேர்ந்து கையாள்வது பற்றிச் சகல நாடுகளின் உதவியும் அவசியம் என்ற நிலையில் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும், வரவேற்கப்பட்ட மற்றைய நாடுகளின் பிரதிநிதிகளும் வரவிருக்கும் மாநாட்டில் விவாதிக்கவிருக்கிறார்கள். இப்படியான ஒரு உயர்மட்ட மா நாட்டில் மியான்மார் பங்கெடுக்க மியான்மார் இராணுவம் முதல் தடவையாக வரவேற்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்