பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ துருக்கி – ஆர்மீனிய எல்லை திறக்கப்பட்டது.
சுமார் 37,000 பேரின் உயிர்களைக் குடித்துவிட்டது துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி. வேதனையான செய்திகளே பெருமளவில் பூமியதிர்ச்சி பற்றி ஊடகங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது நம்பிக்கைக் கீற்றுகளாக நற்செய்திகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலொன்று துருக்கியுடன் நல்லுறவு கொண்டிராத நாடான ஆர்மீனியாவுக்கும் துருக்கிக்கும் இடையே 35 வருடங்களாக மூடப்பட்டிருந்த எல்லை மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகத் திறக்கப்பட்டது எனலாம்.
இரண்டு நாடுகளுக்குமிடையேயிருக்கும், 1988 ம் ஆண்டு மூடப்பட்ட அலிகான் எல்லை வழியாக துருக்கி, சிரியா நாடுகளில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐந்து பாரவண்டிகள் துருக்கிக்குள் நுழைந்தன.
பூமியதிர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக மக்களுக்கு உதவும்படி துருக்கிய ஜனாதிபதி உலக நாடுகளுக்கு விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று ஆர்மீனியாவின் பிரதமர் நிக்கோல் பஷ்னியான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் பதவியேற்ற அவர் ஜனாதிபதி எர்டகானுடன் பேசிய இரண்டாவது தொலைபேசித் தொடர்பு இதுவாகும். அதையடுத்தே ஆர்மீனிய உதவிகளை ஏற்பதற்காக அந்த எல்லை திறக்கப்பட்டது.
சிரிய ஜனாதிபதியுடனும் பஷ்னியான் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அதே வழியாக வரும் உதவிகளி ஒரு பகுதி சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கப்படவிருக்கின்றன. விமானம் மூலமாகவும் சிரியாவுக்கு சுமார் 30 தொன் உணவு, மருந்துகள் போன்றவை ஆர்மீனியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன.
துருக்கியில் வாழ்ந்த ஆர்மீனீயர்கள் 1915 முதல் குறிவைத்து விரட்டப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளும் தொடர்ந்த அந்த இன அழிப்பினால் சுமார் 80,000 முதல் 1.2 மில்லியன் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகின் சுமார் 34 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த இன அழிப்பை இதுவரை துருக்கி ஏற்றுக்கொள்ளவில்லை. 3 மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஆர்மீனியா 1991 இல் சோவியத் யூனியனிலிருந்து விடுதலை பெற்றது. அதை ஒரு நாடாகத் துருக்கி அங்கீகரித்தாலும் அவர்களுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆர்மீனிய இன அழிப்பை ஏற்றுக்கொள்ளாமையே அதன் காரணமாகும்.
2021 இல் இரண்டு நாடுகளும் தமக்கிடையே உறவுகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றன. அதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருடங்கள் கழிந்தும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
ஆர்மீனியாவுடனான பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் செர்தார் கிலிச் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் உதவிகளுக்காகத் துருக்கியின் சார்பாக நன்றி தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்