வடமராட்சி ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் | இன்று ஆரம்பம்

வடமராட்சி ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான யாழ்மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான
மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமராட்சியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் அனுசரணையுடன் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமராட்சி ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணியளவில் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

வடமராட்சிப் பிரதேசத்தின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்காகவும் எங்களில் பலருடன் விளையாடி எமது மண்ணுக்கு பெருமைசேர்த்து எம்மைவிட்டுப் பிரிந்துசென்ற வடமராட்சியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்றுனர்கள், ஆர்வலர்களை நினைவுகூரும் முகமாகவும் இப்போட்டியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இப்போட்டியை ஒழுங்கமைத்து அனுசரணை வழங்கும் வடமராட்சியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் உள்ள திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒரு ஆரம்பநடவடிக்கையாகவும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக சிறந்த பயிற்றுனர்கள் ஊடான பயிற்சிகள் மற்றும் அவர்களின் விளையாட்டு உபகரணங்களுக்கான அனுசரணைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆதரவினை வழங்குவதற்கும் இப்போட்டிகளின் அனுசரணையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

உலகெங்கும் பரந்து வாழும் வடமராட்சியைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனுசரணையுடன் ” விளையாட்டால் ஒன்றிணைவோம் – விளையாட்டை முன்னேற்றுவோம் -நன்றி மறவாதிருப்போம்” என்ற தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டம் முழுக்க முழுக்க விளையாட்டுத் துறையின் அபிவிருத்தி மற்றும் வீரர்களினதும் துறைசார் நிபுணர்களதும் திறன் மேம்பாட்டினையும் இலக்காகக் கொண்டுள்ளது.

இச்செயற்திட்டத்தின் ஆரம்பமாகவே இந்த சுற்றுப்போட்டி நடத்தப்படுவதுடன் எதிர்காலங்களில் மேலும் பல விளையாட்டு நிகழ்வுகளை கழகங்கள், பாடசாலைகள் மூலமாக நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் இப்போட்டி அனுசரணையாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *